உள்ளூர் செய்திகள்

முத்தாரம்மன் கோவிலுக்கு விரதம்: கழுத்தில் மாலை அணிந்தபடி பள்ளிக்கு சென்ற மாணவன் வெளியேற்றம்

Published On 2022-09-27 02:15 GMT   |   Update On 2022-09-27 02:15 GMT
  • மாணவனின் பெற்றோர் பள்ளிக்கு சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.
  • பெற்றோர்-ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில் :

நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு செல்ல விரதம் இருந்து வருகிறார். இதற்காக கழுத்தில் மாலை அணிந்ததோடு காதில் கம்மல், காலில் கொலுசு அணிந்து பள்ளிக்கு சென்றுள்ளார்.

இதனை கண்ட ஒரு ஆசிரியர், மாணவன் அணிந்திருந்த மாலை மற்றும், கம்மல், கொலுசு ஆகியவற்றை கழற்றி வைத்து பள்ளிக்கு வருமாறு எச்சரித்துள்ளார். ஆனால் மாணவனோ விரதம் இருப்பதால் அதனை கழற்ற மறுத்துள்ளார்.

இதனால் வகுப்பறையில் இருந்து மாணவரை ஆசிரியர் வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதுபற்றி மாணவர் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனே மாணவனின் பெற்றோர் பள்ளிக்கு சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.

மேலும் மாணவன் விரதம் இருப்பதால் கம்மல், கொலுசு ஆகியவற்றை அகற்ற முடியாது என பெற்றோர் கூறினர். இதனால் பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்த சிலர் அதனை சமூகவலைதளங்களில் பரப்பியுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

Similar News