உள்ளூர் செய்திகள்

பெரியார் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளை படத்தில் காணலாம்.

பஸ்கள் கிடைக்காமல் பயணிகள் தவிப்பு

Published On 2022-09-14 08:32 GMT   |   Update On 2022-09-14 08:32 GMT
  • பஸ்கள் கிடைக்காததால் மதுரை பஸ் நிலையத்தில் பயணிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.
  • மாணவ, மாணவிகளும் காத்திருந்ததால் சிறிது நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை

பெரியார் பஸ் நிலையத்தில் இன்று காலை போதிய பஸ்கள் இல்லாததால் பயணிகள் கூட்டம் அலைமோதியது கல்வி நிறுவனங்களுக்கு செல்ல முடியாமல் மாணவ மாணவிகளும் தவித்தனர்.

மதுரை இதய பகுதியான பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள நகர் மற்றும் கிராம பகுதிகளுக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் சுமார் 800-க்கும் மேற்பட்ட பஸ்கள் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் பெரியார் பஸ் நிலையத்திற்கு வந்து பிற இடங்களுக்கு செல்வது வழக்கம். இதனால் பெரியார் பஸ் நிலையப் பகுதி எப்போதுமே பயணிகள் கூட்டத்தால் அலை மோதும்.

இந்த நிலையில் இன்று காலை "பீக் அவர்" என்று சொல்லப்படும் காலை 8 மணி முதல் 9 மணி வரை பஸ் நிலையத்துக்குள் ஒரு சில பஸ்கள் மட்டுமே காணப்பட்டன.

முக்கியமாக அழகர் கோவில், நாகமலை புதுக்கோட்டை, விளாங்குடி, சமயநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் டவுன் பஸ்கள் வராததால் பயணிகள் அலைமோதினர். மேலும் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளும் பஸ்கள் வராததால் தவித்தனர்.

சிலர் ஷேர் ஆட்டோக்கள் மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்தி கல்வி நிறுவனங்களுக்கும் அலுவலகங்களுக்கும் சென்றனர். நீண்ட நேரம் பஸ்கள் வராதால் பெரியார் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் கடும் ஆதங்கத்துடன் கூட்டம் கூட்டமாக காத்திருந்தனர்.இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் வழக்கமான அளவில் பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாகவும், பஸ்கள் இயக்கப்பட்டதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்தனர்.

ஆனாலும் பெரியார் பஸ் நிலையத்தில் காலை 8 மணி முதல் 9 மணி வரை குறைந்த அளவு பஸ்களே வந்ததால் பொதுமக்கள் தாங்கள் செல்லும் இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

Tags:    

Similar News