உள்ளூர் செய்திகள்

கைதான 4 பேர்.

ஆம்னி பஸ்களில் மதுரைக்கு போதை பொருள் கடத்தல்

Published On 2022-08-29 08:35 GMT   |   Update On 2022-08-29 08:35 GMT
  • ஆம்னி பஸ்களில் மதுரைக்கு போதை பொருள் கடத்தியவர்கள் பிடிபட்டனர்.
  • இதனைத் தொடர்ந்து மேற்கண்ட 4 பேரையும் தெற்கு வாசல் போலீசார் கைது செய்தனர்.

மதுரை

மதுரை தெற்கு வெளி வீதியில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது.

இதில் தொடர்பு உடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், தெற்கு வாசல் துணை கமிஷனர் சண்முகம் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். அங்கு தக்காளி கூடைகளுடன் ஷேர் ஆட்டோ நின்று கொண்டு இருந்தது. அதில் 4 பேர் இருந்தனர்.

அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். போலீசார் சந்தேகத்தின் பேரில் ஷேர் ஆட்டோவை சோதனை செய்தனர். தக்காளி கூடைகளுக்கு அடியில், 287 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஷேர் ஆட்டோவில் இருந்த 4 பேரையும் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் மேலூர் கல்லம்பட்டி, அப்துல் கலாம் நகர் சதாம் உசேன் (29), மேலூர் முகமது ஆசிப் (29), மாடக்குளம் மெயின் ரோடு அன்வர் (35), தேனி மாவட்டம், உத்தமபாளையம் வல்லவன் (36) என்பது தெரியவந்தது.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். டிராவல்ஸ் அலுவலகத்தில் குட்கா புகையிலைப் பொருட்களை புக்கிங் செய்தது சதாம் உசேன் என்பது தெரியவந்தது. இதனை டெலிவரி எடுப்பதற்காக அவர் மேலூர் காய்கறி சந்தையில் ஆட்டோ ஓட்டி வரும் முகமது ஆசிப் என்பவரை அழைத்து வந்து ள்ளார்.

கர்நாடகாவில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை, இறக்குமதி செய்யும் விஷயத்தில் சதாம் உசேனுக்கு, குஜராத்தில் வேலை பார்க்கும் அன்வர் உதவியாக இருந்தார்.

பண்ணைபுரத்தைச் சேர்ந்த வல்லவன் மதுரை டிராவல்ஸ் பார்சல் புக்கிங் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். அவரது உதவியுடன் இந்த கும்பல் சில மாதங்களாக தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை மதுரைக்கு கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மேற்கண்ட 4 பேரையும் தெற்கு வாசல் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய ஆம்னி பஸ் டிரைவர்கள் ராமு (42), ஜனார்த்தனன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் புகையிலைப் பொருட்களுக்கு தடை இல்லை. இந்த கும்பல், ஆம்னி பஸ்கள் மூலம் மதுரைக்கு புகையிலை பொருட்களை கடத்தி வந்துள்ளனர். இதே போல மதுரையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களிலும் புகையிலை பொருட்கள் கடத்தப்படுகிறதா? என்பது தெரியவில்லை.

இதுகுறித்து மதுரையில் இயங்கும் அனைத்து ஆம்னி பஸ் பார்சல் சர்வீஸ் அலுவலகங்களிலும் விசாரணை நடத்துவது என்று போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News