உள்ளூர் செய்திகள்

நிலம் கொடுத்தவர்கள் இழப்பீட்டு தொகையை பெற்றுக்கொள்ளலாம்

Published On 2022-12-10 06:26 GMT   |   Update On 2022-12-10 06:26 GMT
  • நிலம் கொடுத்தவர்கள் இழப்பீட்டு தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்று கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
  • இந்த நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை, அதிகாரம் பெற்ற அலுவலர் மற்றும் மதுரை மாவட்ட வருவாய் அலுவலரால் வழங்கப்பட்டு வருகிறது.

மதுரை

மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரை மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலை எண். 7-ல் பெங்களூர்-சேலம்-மதுரை நான்கு வழிச்சாலை அமைத்தல் மற்றும் விரிவாக்கம் செய்தல் பணிகளுக்காக வாடிப்பட்டி வட்டத்தில், தும்பிச்சாம்பட்டி, தாதம்பட்டி, குலசேகரன்கோட்டை, தேனூர், தனிச்சியம் கிராமங்களும், மதுரை-கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை அமைத்தல் மற்றும் விரிவாக்கம் செய்தல் பணிகளுக்காக மதுரை தெற்கு வட்டத்தில் வடிவேல்கரை, பரவை பிட்-2, சமயநல்லூர் , தனக்கன்குளம், தட்டானூர், தோப்பூர், துவரிமான், விளாச்சேரி பிட்-1 கிராமங்களிலும், திருமங்கலம் வட்டத்தில், கப்பலூர், கொக்குலாஞ்சேரி, மறவன்குளம், மேலக்கோட்டை, நல்லமநாயக்கன்பட்டி, பழக்காபுதுப்பட்டி, செங்குளம், சிவரக்கோட்டை, உச்சப்பட்டி, குதிரைசாணிகுளம், கே.வெள்ளாகுளம், வேங்கிடசமுத்திரம் ஆகிய கிராமங்களிலும் நிலங்கள் 2006-ம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை, அதிகாரம் பெற்ற அலுவலர் மற்றும் மதுரை மாவட்ட வருவாய் அலுவலரால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நில உரிமையாளர்களில் ஒரு சிலர் இழப்பீட்டுத் தொகையை இதுவரை பெற்றுக்கொள்ளாமல் உள்ளனர். இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ளாதவர்கள் அலுவலக வேலை நாட்களில் நிலஉரிமை தொடர்பான சான்று ஆவணங்களுடன் மதுரை மாவட்ட வருவாய் அலுவலருக்கு விண்ணப்பித்து, அவர்களுக்கு பாத்தியப்பட்ட இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News