உள்ளூர் செய்திகள்

சேலத்தில் காலையில் வெயில், பிற்பகலில் தொடரும் மழை

Published On 2024-05-15 11:16 IST   |   Update On 2024-05-15 11:16:00 IST
  • சங்ககிரி, சேலம், ஏற்காடு ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது
  • ஏற்காட்டில் கடந்த 2 நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. பின்னர் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து கடந்த 2-ந் தேதி அதிக பட்சமாக 108 டிகிரி வெயில் பதிவானது. இதனால் பொது மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளில் முடங்கினர்.

இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. தொடர்ந்து பகல் 1 மணி வரை வெயில் அடிப்பதும், பின்னர் 2 மணியளவில் மழை பெய்வதும் வாடிக்கையாக உள்ளது . 4-வது நாளாக நேற்றும் பகல் 1 மணி வரை வெயில் அடித்த நிலையில் பிற்பகல் 2 மணியளவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது . குறிப்பாக ஏத்தாப்பூர், சங்ககிரி, சேலம், ஏற்காடு ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது .

இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் 4-வது நாளாக நேற்று பெய்த மழையால் தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இரவிலும் இந்த குளிர் நீடித்தது. இதனால் பொது மக்ககள் போர்வையை போர்த்தியபடியே தூங்கினர். மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று காலை 10 மணியளவில் தொடங்கிய மழை நள்ளிரவு வரையும் தூறலாக நீடித்தது. இதனால் ஏற்காட்டில் கடந்த 2 நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் அங்கு வசிக்கும் பொதுமக்கள் கடும் குளிரில் தவித்து வருகிறார்கள்.

சேலம் மாவட்டத்தில் அதிக பட்சமாக நேற்று ஏத்தாப்பூரில் 23 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சங்ககிரி 23, சேலம் மாநகர் 5.4, ஏற்காடு 3.2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 80 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் சேலம் மாநகரில் மழை தூறிய படியே இருந்தது. இதனால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

Tags:    

Similar News