உள்ளூர் செய்திகள்

நிரந்தர அதிகாரிகள் இல்லாததால் களக்காடு நகராட்சியில் பணிகள் முடக்கம் - கலெக்டரிடம் புகார் மனு

Published On 2022-08-24 10:09 GMT   |   Update On 2022-08-24 10:09 GMT
  • களக்காடு பேரூராட்சி கடந்த 12.09.2021 அன்று 2-ம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
  • களக்காடு நகராட்சிக்கு நிரந்தர ஆணையாளர் நியமிக்கப்படாமல் தொடர்ந்து பொறுப்பு ஆணையாளர் மட்டுமே நியமிக்கப்பட்டு வருகிறார்

களக்காடு:

நெல்லை மாவட்ட ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக்கழக தலைவர் களந்தை சித்திக் நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணுவிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

நிரந்தர ஆணையாளர்

களக்காடு பேரூராட்சி கடந்த 12.09.2021 அன்று 2-ம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நகராட்சியாக அறிவிக்கப்பட்டு ஒரு வருடம் ஆகும் நிலையில் நகராட்சிக்கான அடிப்படை கட்டமைப்பு இதுவரை ஏற்படுத்தப்படவில்லை.

களக்காடு நகராட்சிக்கு நிரந்தர ஆணையாளர் நியமிக்கப்படாமல் தொடர்ந்து பொறுப்பு ஆணையாளர் மட்டுமே நியமிக்கப்பட்டு வருகிறார். இதுபோல் அலுவலக மேலாளர், பொறியாளர், நகர்நல அலுவலர், நகரமைப்பு அலுவலர் போன்ற தலைமைப் பணியிடங்கள் காலியாகவே உள்ளன.

பொறியியல் துறையின் கீழ் உதவிப்பொறியாளர் கள், தொழில் நுட்ப உதவியாளர், டவுன் பிளானிங் ஆய்வாளர், பட வரைவாளர், ஓவர்சியர் பணியிடங்களும், நகர் நல அலுவலர் துறையின் கீழ் சுகாதார ஆய்வாளர்கள், வருவாய் ஆய்வாளர், துப்புரவு மேற்பார்வையாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் பணியிடங்களும், நகரமைப்பு அலுவலர் துறையின் கீழ் நகரமைப்பு ஆய்வாளர், பில் கலெக்டர்கள், இளநிலை உதவியாளர்கள், கணினி திட்ட அமைப்பாளர் பணியிடங்களும் நிரப்பப்பட வில்லை.

நிரந்தர அதிகாரிகள் இல்லாததால் களக்காடு நகராட்சியில் பணிகள் முடங்கியுள்ளன. கடந்த ஒரு வருடங்களாக கட்டிட அனுமதி வழங்கப்படவில்லை. புதிய வீட்டுத்தீர்வைகள் போடப்படவில்லை. தீர்வை பெயர் மாற்ற கோரிக்கைகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் களக்காடு பகுதி பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே களக்காடு நகராட்சிக்கு நிரந்தர அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News