உள்ளூர் செய்திகள்

கலெக்டர் செந்தில்ராஜிடம் விவசாயிகள் மனு அளித்த காட்சி.




முருங்கை பயிருக்கு விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் தொகையை ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் -கலெக்டரிடம் விவசாயிகள் மனு

Published On 2022-09-04 08:52 GMT   |   Update On 2022-09-04 08:52 GMT
  • சாத்தான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூர், அரசூர் ஊராட்சி பகுதியில் முருங்கை சாகுபடி அதிகமாக நடந்து வருகிறது.
  • பருவகால பட்டியல் படி முருங்கை மரத்திற்கு நவம்பர், அக்டோபர் மாதங்களில் ஏக்கருக்கு ரூ.14,195 வழங்கப்படுகிறது.

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூர், அரசூர் ஊராட்சி பகுதியில் முருங்கை சாகுபடி அதிகமாக நடந்து வருகிறது. முருங்கை விவசாயிகளுக்கு மத்திய கூட்டுறவு வங்கி மூலம் பருவகால பட்டியல் படி முருங்கை மரத்திற்கு நவம்பர், அக்டோபர் மாதங்களில் ஏக்கருக்கு ரூ.14,195 வழங்கப்படுகிறது.

தொகை குறைவாக இருப்பதால் விவசாயிகள் கடன் தொகையை வாங்கிட ஆர்வம் காட்டவில்லை. ஆதலால் விவசாயிகள் இந்த கடன் தொகை ஆண்டு முழுவதும் வழங்கும் வகையில் ஏக்கருக்கு முருங்கை மரத்திற்கு ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என வலியுறுத்தினர்.

அதன்படி இந்த ஆண்டு முருங்கை விவசாயிகளுக்கு அக்டோபர், நவம்பர் மாதத்திற்கு மட்டுமே ரூ.14,895 வழங்கிட அனுமதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். இந்த தொகையை உயர்த்தி வழங்கிட விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சாத்தான்குளம் ஒன்றியம் பெரியதாழைக்கு வந்த மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜை, சாஸ்தா விநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் லூர்துமணி தலைமையில் செயலாளர் பென்சிகர், சங்க உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், அமல்ராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் எட்வர்ட் லாரன்ஸ், மெஞ்ஞானபுரம் கூட்டுறவு சங்க தலைவர் ஆதிலிங்கம் ஆகியோர் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறி யிருப்பதாவது:- மழை காலம் முடிவடைந்ததும் முருங்கை மரங்கள் மராமத்து செய்யப்பட்டு இயற்கை உரங்கள் வைத்து மாதந்தோறும் உரம் மற்றும் பூச்சு மருந்து தெளித்து விவசாயிகள் முருங்கையை பராமரித்து வருகின்றனர்.

இந்த முருங்கையானது பிப்ரவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை மகசூல் கொடுத்து வருகிறது. முருங்கைக்கு ஆண்டு முழுவதும் கடன் வழங்கினால் அதிகமாக பயிர் கடன் வழங்கிட வாய்ப்பு உள்ளது. ஆதலால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் விவசாய கடன் பெற்று பயனடையும் வகையில், முருங்கை மரத்திற்கு கடன் வழங்கும் காலத்தை ஆண்டு முழுவதும் மாற்றியும், ஏக்கருக்கு ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News