உள்ளூர் செய்திகள்

விசைப்படகுகளுக்கு ஐஸ், டீசல் நிரப்பும் பணியில் மீனவர்கள் தீவிரம்

Published On 2023-07-29 06:33 GMT   |   Update On 2023-07-29 06:33 GMT
  • குமரி மேற்கு கடற்கரையில் 2 நாளில் தடை நீங்குகிறது
  • 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன் பிடித்து விட்டு கரை திரும்பும்

குளச்சல், ஜூலை 29-

மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப்படகுகள் மீன் பிடிப்பதற்கு மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது. குமரி மாவட்டத்தில் இந்த தடைக் காலம் 2 பருவகாலமாக உள்ளது.

குமரி கிழக்கு கடற்கரை பகுதியாகிய கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரையும், மேற்கு கடற்கரை பகுதிகளாகிய மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காய்பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை கிராமத்தில் ஜூன் 1-ந் தேதி முதல் ஜூலை 31-ந் தேதி வரையும் தடைக்காலம் அமலில் இருக்கும்.

தற்போது தடைக்காலம் என்பதால் குளச்சல் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்லும் விசைப்படகுகள் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டன. இந்த காலத்தில் விசைப்படகினர் தங்கள் படகுகளை பழுது பார்த்தனர். வலைகளை பின்னும் பணியிலும் தீவிரமாக ஈடுப்பட்டனர். மீன்பிடி உபகரணங்களையும் பராமரிப்பு செய்தனர்.

இந்த நிலையில் குமரி மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகளுக்கு மீன் பிடி தடைக்காலம் நீங்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் மீண்டும் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.

குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு விசைப்படகு ஆழ்கடல் பகுதி வரை சென்று 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன் பிடித்து விட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில் தான் உயர் ரக மீன்களாகிய கணவாய், இறால், புல்லன், சுறா, கேரை போன்றவை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் ஐஸ் போன்ற அத்தியாவசிய பொருட்களை விசைப்படகில் எடுத்து செல்வார்கள். அதன் ஒரு பகுதியாக விசைப்படகுகளில் ஐஸ் நிரப்பும் பணி இன்று காலை தொடங்கியது. டீசல் நிரப்பும் பணி குடிநீர் ஏற்றும் பணியும் தொடங்கி உள்ளது.

இதற்காக மீன் பிடி சார்ந்த தொழிலாளர்கள் மீண்டும் குளச்சல் வந்து தங்கள் வழக்கமான பணியை தொடங்கி உள்ளனர். இதனால் குளச்சல் மீன் பிடித்துறைமுகம் மீண்டும் பரபரப்பாக இயங்க தொடங்கி உள்ளது. விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் வந்து நிற்க தொடங்கி விட்டன. 31-ந் தேதி நள்ளிரவு முதல் விசைப்படகில் மீன் பிடிக்கும் பணி தொடங்குவதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News