உள்ளூர் செய்திகள்

ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்- சுகாதார பணி பாதிக்கும் அபாயம்

Published On 2022-10-02 05:33 GMT   |   Update On 2022-10-02 05:33 GMT
  • கோவை மாவட்டத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.721 வழங்க கலெக்டர் நிர்ணயித்துள்ளார். ஆனால்
  • அரசு ஆஸ்பத்திரிகள், நகர பகுதிகளில் சுகாதார பணி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவை:

கோவை மாவட்டத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.721 வழங்க கலெக்டர் நிர்ணயித்துள்ளார். ஆனால் அந்த கூலி உயர்வு அமல்படுத்தப்படவில்லை.

இதைத் தொடர்ந்து கூலி உயர்வு, பணி நிரந்தரம் உள்பட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் தொழிற்சங்கத்தினர் காந்திஜெயந்தி தினமான இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

கோரிக்கை மற்றும் வேலை நிறுத்தம் தொடர்பாக கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் உள்பட பலருக்கும் முன் அறிவிப்பு கொடுத்தனர். மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி தலைமையில் 2 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அது தோல்வியில் முடிந்ததாக தெரிகிறது. இதையடுத்து திட்டமிட்டபடி இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். கோவை நகரில் 3,500 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் தூய்மை தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக தூய்மை பணியாளர்கள் தெரிவித்தனர்.

இதனால் அரசு ஆஸ்பத்திரிகள், நகர பகுதிகளில் சுகாதார பணி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கோவை மாநகராட்சி அலுவலகம் முன் திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கூறும்போது:-

பெரும்பாலான தொழிற்சங்கத்தினர் வேலைக்கு வருவதாக தகவல் அளித்து உள்ளனர். ஒரு சில தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளனர்.

போராடுவது அவர்களது உரிமை. ஆனால் யாரையும் வலுக்கட்டாயமாக வேலைக்கு செல்லக்கூடாது என்று தடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் நிர்ணயித்த கூலி வழங்குவது குறித்து அரசு முடிவு செய்து அறிவிக்கும். பணிக்கு வரும் தூய்மை பணியாளர்களை வைத்து நிலைமை சமாளிக்கப்படும் என்றார்.

Similar News