உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

குட்கா, புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு 'சீல்'

Published On 2022-09-09 10:09 GMT   |   Update On 2022-09-09 10:09 GMT
  • 109 கடைகளில் தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
  • தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது ஏதாவது கடையில் கண்டுபிடிக்கப்பட்டால் அந்த கடை பூட்டி சீல் வைக்கப்படும்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாக மளிகை கடை, பெட்டிக்கடைகளில் சோதனை ஏற்கனவே நடத்தப்பட்டு 109 கடைகளில் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக கடை உரிமையாளர்கள் விளக்கம் அளிக்காததாலும், அவர்கள் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததாலும் கடைகளை பூட்டி சீல் வைக்க கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி இன்று தஞ்சை வடக்கு வீதியில் 2 கடைகளுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், போலீஸ் சூப்பிரண்டு ரவுளிபிரியா ஆகியோர் மேற்பார்வையில் தாசில்தார் மணிகண்டன், உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் சித்ரா மற்றும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அதைத்தொடர்ந்து தஞ்சை மாநகரில் 9 கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். தஞ்சை மாநகரில் மட்டும் 11 கடைகளுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது.இதேபோல் தஞ்சை மாவட்டம் முழுவதும் கலெக்டர் தினேஷ் பொ ன்ராஜ் ஆலிவர் உத்தரவுபடி இன்று 109 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.

இது குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் கடைகளில் குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா என்று ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டது.

அதன் முடிவில் மாவட்டத்தில் 109 கடைகளில் தடையை மீறி புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதற்கு சரியான விளக்கம் இல்லாததால் இன்று அந்த 109 கடைகளையும் பூட்டி சீல் வைத்தோம்.

தொடர்ந்து மாவட்டத்தின் அனைத்து கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வது ஏதாவது கடையில் கண்டுபிடிக்கப்பட்டால் அந்த கடை பூட்டி சீல் வைக்கப்படும்.

கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியில் 100 மீட்டர் தொலைவுக்குள் டாஸ்மாக் கடை இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா அளித்த பேட்டியில், தஞ்சை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மாவட்டத்தில் ஆபரேஷன் கஞ்சா 2.0 செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கஞ்சா விற்றதாக 200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து மாவட்டத்தில் சோதனை நடந்து வருகிறது என்றார்.

இன்று கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

Tags:    

Similar News