உள்ளூர் செய்திகள்

தருமபுரி கடைவீதி ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 46-ம் ஆண்டு திருவிழா

Published On 2022-08-16 10:30 GMT   |   Update On 2022-08-16 10:30 GMT
  • இந்த திருவிழா 20-ந்தேதி வரை நடக்கிறது.
  • விருந்தாடி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், கூழ் வார்த்தலும் நடந்தது.

தருமபுரி,

தருமபுரி நகர் பெரியார் சிலை அருகே கடை வீதி ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 46-ம் ஆண்டு திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழா 20-ந்தேதி வரை நடக்கிறது.

ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், கணபதி ஹோமம் நடந்து கொடியேற்றுதல் நிகழ்ச்சியும் நடந்தது.

இன்றுகாலை மாரியம்மன் கரகம் திருவீதி உலா நடந்தது. பின்னர் விருந்தாடி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், கூழ் வார்த்தலும் நடந்தது.

இதையடுத்து நாளை விருந்தாடி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது.

18-ந்தேதி ஸ்ரீ ஹரிஹரநாத சுவாமி கோவிலில் இருந்து பால்குடம் ஊர்வலமாக எடுத்து வந்து அம்பிகா பரமேஸ்வரி அம்மனுக்கு பால் அபிஷேக ஆராதனையும், வெள்ளி கவச சாத்துதலும் நடக்கிறது. இதனை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் அம்மன் உற்சவருக்கு பூச்சாட்டுதல் நடக்கிறது.

19-ந்தேதி அன்று மாலை 4 மணி அளவில் ஸ்ரீ மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மன் அலங்காரத்துடன் மஹா கணபதி ேஹாமம், சரஸ்வதி ஹோமமும் நடக்கிறது. மாலை 5 மணி அளவில் 504 பெண்கள் கலந்து கொள்ளும் மாபெரும் திருவிளக்கு பூஜை நடக்கிறது.

20-ந்தேதி ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், கரகத்திற்கு மறுபூஜையும், மஞ்சள் நீராட்டு விழாவும், அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் திருவீதி உலாவும் நடக்கிறது.

Tags:    

Similar News