உள்ளூர் செய்திகள்

பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளதை படத்தில் காணலாம்.

தருமபுரி பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

Published On 2022-10-05 09:40 GMT   |   Update On 2022-10-05 09:40 GMT
  • ஆயுத பூஜை கொண்டாடியதால் தருமபுரி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கடும் உயர்வு ஏற்பட்டது.
  • இன்று பூக்களின் வரத்து வெகுவாக குறைந்ததால் பூ மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.

தருமபுரி, அக்.5 -

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம், பாலக்கோடு, மாரண்ட ஹள்ளி, காரிமங்கலம், தொப்பூர், நல்லம்பள்ளி, கடத்தூர், பொம்மிடு உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் விவசாயிகள் அதிகபடியாக மலர் சாகுபடி செய்து வருகின்றனர்.

இதில் குண்டுமல்லி, கனகாம்பரம், சாமந்தி, செண்டுமல்லி, சம்பங்கி, பட்டன் ரோஸ், கோழி கொண்டை, அரளி உள்ளிட்ட பூ வகைகளை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பூக்கள் அனைத்தும் தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் தினசரி நடைபெறும் பூ மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். கடந்த சில வாரங்களாக பூக்கள் விலை இல்லாமல் விவசாயிகளும் பூ மார்க்கெட் வியாபாரிகளும் கவலையடைந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த மாதம் விநாயகர் சதூர்த்தி முதல் பூக்களின் விலை உயரத் தொடங்கியது. மேலும் ஆவணி மாதத்தில் தொடர்ந்து சுப முகூர்த்த தினங்கள் வருவதால், தருமபுரி பூக்கள் சந்தைக்கு பூக்களின் வரத்து அதிகரித்தது.

இதனைத் தொடர்ந்து நேற்றும், இன்றும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை என்பதால் பூக்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் முன்கூட்டியே சாமந்தி, சம்பங்கி,குண்டு மல்லி, சன்னமல்லி, அரளி, பன்னீர் ரோஸ், கோழிகொண்டை, உள்ளிட்ட பூக்களை அறுவடை செய்து தருமபுரி பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வந்தனர்.

வணிக நிறுவனங்கள், சிறு தொழில் செய்யும் வணிகர்கள், தொழில்துறைகள், ஆட்டோ மெக்கானிக்கல் கடைகள், உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆயுத பூஜை கொண்டாடியதால் தருமபுரி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கடும் உயர்வு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று பூக்களின் வரத்து வெகுவாக குறைந்ததால் பூ மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.

நேற்று 250 ரூபாய்க்கு விற்பனையான சாமந்திப்பூ இன்று 350 ரூபாய்க்கும் சன்னமல்லி ரூபாய் 600 , குண்டுமல்லி ரூபாய் 800, காக்கட்ட ரூபாய் 500, கலர் காக்கட்ட ரூபாய் 500, கனகா மரம் ரூபாய் 800, ஜாதிமல்லி ரூபாய் 280, அரளிப்பு ரூபாய் 300, மூக்குத்திப்பூ ரூபாய் 200, சம்பங்கி ரூபாய் 250, பன்னீர் ரோஸ் ரூபாய் 200, நந்தியாவட்டம் ரூபாய் 200, என பூ மார்க்கெட்டில் கடும் விலை உயர்வு காணப்பட்டது. நேற்று முதல் இன்று வரை பூக்களை வாங்கி மாலையாகவும், சரமாளியாகவும் விற்பனை செய்யும் வியாபாரிகள் ஒரு முழம் பூ 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

Tags:    

Similar News