உள்ளூர் செய்திகள்

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாக மேலும் 1 மாதம் ஆகலாம்- பல்கலைக்கழகம் கல்லூரிகளுக்கு மானியக்குழு கடிதம்

Published On 2022-07-13 09:50 GMT   |   Update On 2022-07-13 09:50 GMT
  • நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
  • கலை அறிவியல் கல்லூரிகள், தொழில் நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டு முடிந்து வருகிறது.

சென்னை:

மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) பாடத்திட்டத்தில் படித்து பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு இன்னும் தேர்வு முடிவு வெளியாகவில்லை. இந்த மாதம் தொடக்கத்தில் முடிவு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பின்னர் அவை தள்ளிப்போனது. தேர்வு முடிவு தாமதம் ஆவதால் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர். உயர் படிப்புகளில் சேருவதற்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

கலை அறிவியல் கல்லூரிகள், தொழில் நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டு முடிந்து வருகிறது. தனியார் சுயநிதி கல்லூரிகளில் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பி வருகிறார்கள்.

இந்த நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு (யு.சி.ஜி.) அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

சி.பி.எஸ்.இ., பிளஸ்-2 தேர்வு முடிவு தாமதம் ஆகி வருகிறது. தேர்வு முடிவு வெளியாக மேலும் ஒரு மாதம் ஆகலாம். அதனால் உயர் கல்வியில் சேருவதற்கான மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் கொடுக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை முன்னதாக முடிக்க கூடாது. உரிய அவகாசம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News