உள்ளூர் செய்திகள்

ஆட்டோ கவிழ்ந்து மாணவன் பலி- தப்பி ஓடிய ஆட்டோ டிரைவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

Published On 2022-06-28 04:45 GMT   |   Update On 2022-06-28 04:45 GMT
  • ஆட்டோ அனவரதநல்லூர் பகுதியில் சென்றபோது நிலைதடுமாறி சாலை ஓரத்தில் கவிழ்ந்தது.
  • விபத்து நடந்ததும் டிரைவர் ராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவர் செல்போன் பேசியபடியே ஆட்டோ ஓட்டியதாக காயம் அடைந்த மாணவர்கள் கூறினர்.

செய்துங்கநல்லூர்:

நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள ஊத்துபாறையை சேர்ந்த ராஜா மகன் செல்வநவீன் (வயது 5) உள்பட 8 மாணவர்கள் பாளை கே.டி.சி. நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு நேற்று காலை ஆட்டோவில் சென்றனர்.

ஆட்டோவை நட்டார்குளத்தை சேர்ந்த ராஜ் என்பவர் ஓட்டினார். ஆட்டோ அனவரதநல்லூர் பகுதியில் சென்றபோது நிலைதடுமாறி சாலை ஓரத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் எல்.கே.ஜி. மாணவரான செல்வநவீன் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 7 பேரில் முகிலா, நவீன் குமார் ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். 5 பேர் லேசான காயத்துடன் தப்பினர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து நடந்ததும் டிரைவர் ராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவர் செல்போன் பேசியபடியே ஆட்டோ ஓட்டியதாக காயம் அடைந்த மாணவர்கள் கூறினர்.

இதைத் தொடர்ந்து ராஜ் மீது அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டி மரணம் ஏற்படுத்துதல், மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தப்பி ஓடிய அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, பலியான மாணவன் செல்வநவீன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

Similar News