உள்ளூர் செய்திகள்

புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டத்தை படத்தில் காணலாம்.

பள்ளிகள் திறப்பையொட்டி நெல்லையில் இருந்து சென்னைக்கு இன்று 30 சிறப்பு விரைவு பஸ்கள் இயக்கம்

Published On 2022-06-12 09:23 GMT   |   Update On 2022-06-12 09:23 GMT
  • நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலானோர் சென்னை, பெங்களூரு, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் பணி நிமித்தமாக குடும்பத்துடன் தங்கி உள்ளனர்.
  • பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் நேற்று இரவு முதலே அவர்கள் குடும்பத்துடன் பஸ், ரெயில்களில் பணி செய்யும் இடங்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.

நெல்லை:

தமிழகம் முழுவதும் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனையொட்டி விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு திரும்பியவர்கள் மீண்டும் பணிபுரியும் இடங்களுக்கு செல்வதற்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலானோர் சென்னை, பெங்களூரு, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் பணி நிமித்தமாக குடும்பத்துடன் தங்கி உள்ளனர். பள்ளி தேர்வு முடிந்து வகுப்புகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பினர்.

இந்நிலையில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் நேற்று இரவு முதலே அவர்கள் குடும்பத்துடன் பஸ், ரெயில்களில் பணி செய்யும் இடங்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். இதனால் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

இன்று 2-வது நாளாக புதிய பஸ் நிலையத்தில் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததை காணமுடிந்தது. நெல்லை போக்குவரத்து கழகம் சார்பில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை தவிர்த்து நேற்று இரவு 30 சிறப்பு பஸ்கள் இயங்கின. இவை அனைத்தும் முழுவதுமாக நிரம்பிவிட்டது.

இதனால் இன்று மாலை முதல் பயணிகள் கூட்டத்தை பொறுத்து மேலும் 10 பஸ்கள் வரை கூடுதலாக இயக்கப்பட உள்ளது. மேலும் நாளை காலை முதல் வழக்கமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடிக்கு பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் 900 பஸ்களும் கண்டிப்பாக இயக்கப்பட வேண்டும் என்றும், டிரைவர், கண்டக்டர்களுக்கு விடுப்பு கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் விரைவு போக்குவரத்து கழக பணிமனை சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. நேற்று சென்னைக்கு 23 பஸ்களும், கோவைக்கு 3 பஸ்களும், பெங்களூருவுக்கு 7 பஸ்களும் இயக்கப்பட்டன.

இன்று சென்னைக்கு கூடுதலாக 10 பஸ்கள் வரை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News