உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நெல்லை போலீஸ் டி.ஐ.ஜி.யிடம் இன்ஸ்பெக்டர் மீது மூதாட்டி புகார்

Published On 2022-06-02 10:13 GMT   |   Update On 2022-06-02 10:13 GMT
நாங்குநேரியை சேர்ந்த மூதாட்டி நெல்லை சரக டி.ஐ,ஜி.யிடம் மனு அளித்தார்.
நெல்லை:

நாங்குநேரி அருகே உள்ள வடக்கு இளங்குளத்தை சேர்ந்தவர் மரியபாப்பு (வயது 65).
 
இவர் நெல்லை சரக டி.ஐ.ஜி. அலுவலகத்திற்கு இன்று தனது மகள்கள் மலர்விழி, சாந்தி ஆகியோருடன் வந்தார். பின்னர் அவர்  டி.ஐ.ஜி. பிரவேஷ்குமாரிடம் ஒரு மனு கொடுத்தார்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எனக்கு சொந்தமான இடத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின கீழ் வீடு கட்டிவருகிறேன்.

வீட்டின் பின்புறம் கழிவறை கட்டினேன். ஆனால் எனது வீட்டை அபகரிக்கும் எண்ணத்தில் அதே பகுதியை  சேர்ந்த ஒருவர் தனது இடத்தில் உள்ளதாக கூறி கழிப்பறையை இடித்தார்.

அதனை தட்டிக்கேட்ட எனது மகளையும் அவர் தாக்கினார். இதில் காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இது தொடர்பாக வடக்கு விஜயநாராயணம் போலீசில் புகார் செய்தோம். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் இடம் தொடர்பாக சம்பந்தப்பட்ட இருதரப்பினரும் நிலத்தை அளவீடு செய்து கொள்ள வேண்டும் என கூறினார்.

அதுவரை கட்டிட பணிகள் நடத்தக்கூடாது எனவும் தெரிவித்தார். ஆனால் அந்த நபர் தொடர்ந்து கட்டிடப்பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக செயல்படுகிறார். எனவே இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News