உள்ளூர் செய்திகள்
என்ஜினீயர் வீட்டு முன்பு குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தண்டபாணி.

பணம் வாங்கி ஏமாற்றிய என்ஜினியர் வீட்டு முன்பு வியாபாரி குடும்பத்துடன் தர்ணா

Published On 2022-05-25 07:52 GMT   |   Update On 2022-05-25 07:52 GMT
திண்டுக்கல்லில் பணம் வாங்கி ஏமாற்றிய என்ஜினியர் வீட்டு முன்பு வியாபாரி குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்
திண்டுக்கல்:

திண்டுக்கல் லயன்தெருவை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் சிக்கன்கடை நடத்தி வருகிறார். இவருக்கு புஷ்பவள்ளி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். எரியோடு காமராஜ்நகரில் உள்ள தனக்கு சொந்தமான 900 சதுரடி இடத்தில் வீடு கட்டி கொடுக்கும்படி கொத்தனார் முருகேசன் என்பவர் மூலம் என்ஜினீயர் காளிதாசை அணுகினார். அதன்படி கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வீடு கட்டும் பணி வழங்கப்பட்டது.

ரூ.12 லட்சத்து 60 ஆயிரம் செலவாகும் என காளிதாஸ் கூறியுள்ளார். தண்டபாணி அட்வான்சாக ரூ.9லட்சத்து 10 ஆயிரம் கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பாதி வேலையுடன் நிறுத்திவிட்டு காளிதாஸ் சென்றுவிட்டார். இதுகுறித்து தண்டபாணி அவரிடம் சென்று கேட்டபோது தனக்கு மேலும் பணம் வேண்டும் எனக்கூறியுள்ளார்.

இதுகுறித்து எரியோடு, நகர்வடக்கு போலீஸ் நிலையத்தில் தண்டபாணி புகார் அளித்தார். போலீசார் இதுவரை கட்டியுள்ள கட்டிடத்தின் மதிப்பு எவ்வளவு என்பதை வேறு என்ஜினீயரை வைத்து ஆய்வு செய்து வருமாறு கூறினர். அதன்படி ஆய்வு செய்ததில் இதுவரை கட்டிய கட்டிடத்தின் மதிப்பு ரூ.6 லட்சம் என தெரியவந்தது. தான் வழங்கிய தொகையான ரூ.9 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சம் வரை மட்டுமே காளிதாஸ் பணிகள் செய்திருப்பதால் மீதி பணத்தை தரும்படி மாவட்ட எஸ்.பியிடம் புகார் அளித்தார்.

இருந்தபோதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையே பணம் கேட்டதால் தண்டபாணியை காளிதாஸ் தாக்கியதாவும், தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறி ஆர்.எம்.காலனி வண்டிப்பாதை பகுதியில் உள்ள என்ஜினீயர் காளிதாஸ் வீட்டு முன்பு தண்டபாணி தனது குடும்பத்தினருடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நகர் மேற்கு போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் தண்டபாணி குடும்பத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News