உள்ளூர் செய்திகள்
விசைத்தறிகள் இயங்காததால் தொழிலாளர்கள் இன்றி விசைத்தறி கூடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

2-வது நாளாக ஸ்டிரைக்: திருப்பூரில் ரூ.200 கோடி ஜவுளி வர்த்தகம் பாதிப்பு

Published On 2022-05-23 10:58 GMT   |   Update On 2022-05-23 10:58 GMT
வேலைநிறுத்தம் காரணமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் இயங்கவில்லை. இதனால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பல்லடம்:

திருப்பூர் பின்னலாடை உள்பட ஜவுளி தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 18 மாதங்களாக நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஜவுளித் தொழில்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே நூல் விலை உயர்வை கண்டித்தும், அதனை கட்டுப்படுத்தக்கோரியும் கடந்த 16,17-ந்தேதி திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் நேற்று முதல் 15 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் இயங்கவில்லை. இதனால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மற்றும் திருப்பூர் மங்கலம், பல்லடம், கரைப்புதூர், அவினாசி, சோமனூர், தெக்கலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விசைத்தறிகள் இயங்காததால் தொழிலாளர்கள் இன்றி விசைத்தறி கூடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மேலும்நாள் ஒன்றுக்கு ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்படுகிறது.

இன்று 2-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. இதனால் ரூ.200 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News