உள்ளூர் செய்திகள்
கைது

மயிலாப்பூரில் தமிழ்ஈழ ஆதரவு கூட்டம் நடத்திய 16 பேர் கைது

Update: 2022-05-22 07:48 GMT
தமிழ்ஈழ ஆதரவாளர்களான பேராசிரியர் சரஸ்வதி, தியாகு, வக்கீல்கள் பார்வேந்தன், திருமுர்த்தி உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:

நாடு கடந்த தமிழ்ஈழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு தொடக்க நிகழ்வு என்ற பெயரில் தமிழகத்தில் முதல் முறையாக நேற்று நடைபெற்றது. தமிழ் ஈழ ஆதரவாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

தி.நகரில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மாலை 5 மணியளவில் நடைபெறுவதாக இருந்த நிலையில் இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

இந்த கூட்டத்துக்கு முறைப்படி அனுமதி பெறவில்லை என்று கூறி கூட்டத்தை நடத்த போலீசார் தடை விதித்தனர். இதை தொடர்ந்து மயிலாப்பூரில் உள்ள திராவிட விடுதலை கழக அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.

நேற்று இரவு நடைபெற்ற இந்த கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மலேசியா பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி, நாடு கடந்த தமிழ்ஈழ அரசாங்கத்தின் பிரதமர் உத்திரகுமரன் ஆகியோர் காணொலியில் பங்கேற்றனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் நேற்று இரவு 8 மணிஅளவில் மயிலாப்பூர் போலீசார் கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அனுமதியின்றி கூட்டம் நடத்தக்கூடாது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் தமிழ்ஈழ ஆதரவாளர்களான பேராசிரியர் சரஸ்வதி, தியாகு, வக்கீல்கள் பார்வேந்தன், திருமுர்த்தி உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

அனுமதியின்றி தமிழ்ஈழ ஆதரவாளர்களின் கூட்டத்தை நடத்தியதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

பின்னர் நேற்று இரவு 10.45 மணி அளவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று மாலை பெசன்ட் நகரில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ் ஈழ ஆதரவு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News