உள்ளூர் செய்திகள்
சோலையாறு அணை

சோலையாறு அணை நீர்மட்டம் 10 அடி உயர்வு

Update: 2022-05-22 03:35 GMT
வால்பாறையில் தொடர்மழை காரணமாக சோலையாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்து உள்ளது.
வால்பாறை:

கோயம்புத்தூர் வால்பாறை, வால்பாறையில் தொடர் மழை காரணமாக சோலையாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்து உள்ளது. கூழாங்கல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பிரதேசமாக உள்ளது. வால்பாறை நகரில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. பகல், இரவில் விட்டுவிட்டு மழை பெய்வதால் இதமான காலநிலை நிலவுகிறது. தொடர் மழையால் வால்பாறை மலைப்பகுதியில் ஆங்காங்கே நீர்வீழ்ச்சிகள் தோன்றி உள்ளதோடு, தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து வருகிறது.

கோடை காலம் என்பதால் சோலையாறு அணையை பார்வையிட சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்தனர். சீதோஷ்ண காலநிலையை அனுபவிக்கும் பலர் குவிந்து வருகின்றனர். அணையின் இயற்கை அழகை கண்டு ரசித்தும், புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். அங்கு கடும் பனிமூட்டம் நிலவியதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். தமிழக, கேரள எல்லை பகுதியான சாலக்குடி செல்லும் பகுதியில் கனமழை பெய்தது.

தொடர் மழையால் வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் கூழாங்கல் ஆற்றில் வழக்கத்தை விட தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆற்றில் இறங்கி குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சோலையாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து, வினாடிக்கு 2,090 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 160 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே செல்கிறது.

நேற்று ஒரே நாளில் நீர்மட்டம் 10 அடி உயர்ந்தது. தற்போது 42 அடியாக உயர்ந்து உள்ளது. தொடர் மழையால் சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. நேற்று காலை 6 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

சோலையார் அணை-64, பரம்பிக்குளம் அணை-80, வால்பாறை-78, அப்பர் நீராறு-74, லோயர் நீராறு-70, காடம்பாறை-18, சர்க்கார்பதி -25, வேட்டைக்காரன் புதூர்-18.6, மணக்கடவு-14.3, தூணக்கடவு-22, பெருவாரிபள்ளம்-32, அப்பர் ஆழியார்-11 மழை பெய்து உள்ளது.
Tags:    

Similar News