உள்ளூர் செய்திகள்
கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த அ.தி.மு.க. கவுன்சிலர்களை படத்தில் காணலாம்.

சொத்துவரி உயர்வு தீர்மானத்துக்கு எதிர்ப்பு: தருமபுரி நகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

Published On 2022-05-21 11:04 GMT   |   Update On 2022-05-21 11:04 GMT
சொத்துவரி உயர்வு தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தருமபுரி நகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தருமபுரி, 

தருமபுரி நகராட்சி அவசரக்கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கில்  நடைபெற்றது. 
கூட்டத்திற்கு நகராட்சித் தலைவர் தி.மு.க லட்சுமி நாட்டான்மாது தலைமை தாங்கினார். கூட்டத்தில் சொத்து வரியை உயர்த்துவது தொடர்பான தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் எழுந்து நின்று சொத்து வரியை உயர்த்தக் கூடாது என்று கடந்த நகராட்சி கூட்டத்திலேயே நாங்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தோம். 

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இந்த சொத்து வரி உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக பொதுமக்களுக்கு முறையாக அறிவிக்கப்படவில்லை என்று கூறினர்.  

சொத்து வரி உயர்வு தொடர்பாக முறையாக பத்திரிகை களில் விளம்பரம் செய்யப்பட்டது. இது தொடர்பாக 21 ஆட்சேபனை கடிதங்கள் வந்தது. அந்தக் கடிதங்கள் அனைத்தும் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இல்லாததால் அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டது என்று நகராட்சி பொறியாளர் தெரிவித்தார்.

இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பொதுமக்களை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் அ.தி.மு.க. துணை போகாது. இந்த சொத்து வரி உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று ராஜாத்தி ரவி உள்ளிட்ட அ.தி.மு.க. உறுப்பினா்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து தி.மு.க. கவுன்சிலர்கள் ஆதரவுடன் சொத்து வரி உயர்வை தீர்மானம் நிறைவேறியது. 

முன்னதாக தருமபுரி நகராட்சி பகுதியில் 2-வது கட்டமாக பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றுவது தொடர்பாக கலந்துரையாடல் கூட்டம் நகராட்சித் தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமையில் நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
Tags:    

Similar News