உள்ளூர் செய்திகள்
சுடுகாட்டை ஆக்கிரமிப்பு செய்யும் முயற்சியை கோரி உதவி கலெக்டர் மனு அளிக்த போது எடுத்த படம்.

குடியாத்தத்தில் சுடுகாட்டை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சியா? - அதிகாரிகளிடம் மனு

Published On 2022-05-21 10:37 GMT   |   Update On 2022-05-21 10:37 GMT
குடியாத்தத்தில் சுடுகாட்டை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்யப்படுவதாக அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.
குடியாத்தம்:

குடியாத்தம் நகராட்சி 13வது வார்டு பகுதியான குடியாத்தம்-காட்பாடி ரோடு ராஜிப்பட்டி பகுதியில் வசிக்கும் அருந்ததி இன மக்கள் கடந்த பல வருடங்களாக கொண்ட சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட வனத்துறை அலுவலகம் அருகே உள்ள ராஜகோபால் நகரில் தனியார் நூற்பாலை பின்புறம் பகுதியை சுடுகாடாக பயன்படுத்தி வந்தனர். 

இவர்கள் சுடுகாடாக பயன்படுத்தி வந்த இடத்தை சுற்றி வீடுகள் அமைந்ததால் பல ஆண்டுகளுக்கு முன் சடலங்களை புதைக்க அங்கு வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அவர்களுக்கு மாற்று இடத்தில் சடலத்தை புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அருந்ததியின மக்கள் சுடுகாடாக பயன்படுத்திய இடத்தை தங்களுக்கு வீட்டு மனைகளாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் அருந்ததி இன மக்கள் சுடுகாடாக பயன்படுத்திய இடத்தை அதன் அருகில் உள்ள தனியார் நூற்பாலையினர் தங்களுக்கு சொந்தமான இடம் என்று கூறி நேற்று சுத்தம் செய்து வேலி அமைக்க முயன்றனர். 

இதனையடுத்து குடியாத்தம் நகராட்சி 13-வது வார்டு நகர்மன்ற உறுப்பினரும், புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளருமான பி.மேகநாதன், ராமாலை ஒன்றிய குழு உறுப்பினர் குட்டிவெங்கடேசன் உள்ளிட்டோர் அருந்ததியினரை மக்களுடன் சென்று தனியார் நூற்பாலை ஊழியர்களிடம் இந்த இடம் அருந்ததியின மக்களுக்கு சுடுகாடாக பயன்படுத்த ஒதுக்கப்பட்ட இடம் என தெரிவித்தனர்.

இதனையடுத்து வேலி அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. அப்போது தனியார் நூற்பாலை ஊழியர்கள் இந்த இடம் தனியார் நூற்பாலைக்கு சொந்த மானது எனவும் இதற்கான பட்டா உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் நகர்மன்ற உறுப்பினர் மேகநாதன் தலைமையில் குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன்,  தாசில்தார் லலிதா ஆகியோரிடம் அருந்ததியினரை மக்கள் பயன்படுத்திய இடத்தில் வீட்டுமனைகள் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

அப்போது உதவி கலெக்டர் அந்த இடம் குறித்து முறையாக அளவீடு செய்யப்பட்டு தனியார் நூற்பாலை சொந்தமான இடம் என்றால் அவர்களுக்கு ஒப்படைக்கப்படும்.

மேலும் அந்த இடம் கால்வாய் புறம்போக்கு இடம் என தெரியவந்தால் அந்த இடத்தில் வீட்டுமனைப்பட்டா வழங்க இயலாது எனவும் அருந்ததி மக்கள் மனு அளித்தால் அவர்களுக்கு மாற்று இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் பிரச்சினைக்குரிய இடத்தில் ஒரிரு தினங்களில் வருவாய்த் துறையினர் சார்பில் இடம் அளவீடு செய்யப்பட்டு யாருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படும் என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News