உள்ளூர் செய்திகள்
சரண்

சென்னை நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் கள்ளக்குறிச்சி கோர்ட்டில் 2 பேர் சரண்

Published On 2022-05-20 10:29 GMT   |   Update On 2022-05-20 10:29 GMT
சென்னை நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் கள்ளக்குறிச்சி கோர்ட்டில் 2 பேர் சரணடைந்தனர். அவர்கள் இருவரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

கள்ளக்குறிச்சி:

சென்னை சேத்துப்பட்டு வைத்தியநாதன் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 35), இவர் வட்டிக்கும், மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கும் பணம் கடன் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவரது அலுவலகம் அண்ணாநகரில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஆறுமுகம், அண்ணாநகரில் உள்ள தனது அலுவலகத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அமைந்தகரை அடுத்த செனாய்நகர் அருகே சென்றபோது, 3 மோட்டார் சைக்கிள்களில் இவரை பின்தொடர்ந்துவந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென ஆறுமுகத்தை வழி மறித்து ஓட, ஓட வெட்டி கொலை செய்தது.

இது தொடர்பாக அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் ஆறுமுகம் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சென்னை தஞ்சை நகரை சேர்ந்த சந்திரசேகர் (வயது 28), செனாய் நகரை சேர்ந்த ரோகித்ராஜ் (31) ஆகிய 2 பேரும் நேற்று கள்ளக்குறிச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

அவர்கள் இருவரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து சந்திரசேகர்,ரோகித்ராஜ் ஆகியோரை கள்ளக்குறிச்சி போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News