உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

துப்பாக்கி வைத்துள்ள 1,456 பேரிடம் போலீசார் விசாரணை

Published On 2022-05-19 09:52 GMT   |   Update On 2022-05-19 09:52 GMT
வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் துப்பாக்கி வைத்துள்ள 1,456 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் ஜெகதீசன் என்பவர் துப்பாக்கியால் அவரது தம்பி கோதண்டராமன் என்பவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுட்டுக் கொலை செய்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகதீசனை கைது செய்தனர். மேலும் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி லைசென்ஸ் பெற்று வைத்திருந்தது தெரியவந்தது.

வங்கி ஊழியர்களின் விதிமுறைகளின் கீழ் ஜெகதீசன் தனது துப்பாக்கி லைசென்சை புதுப்பித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

போலீஸ் நிலையங்களில் லைசென்சு பெற்ற துப்பாக்கி வைத்திருப்பவர்கள் பதிவேட்டை பராமரித்து வருகின்றனர். ஆண்டுக்கு இருமுறை லைசென்சு பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்களிடம் லைசென்ஸ் மற்றும் துப்பாக்கி பயன்பாடு குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. இதனை மேலும் அதிகப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் 759, திருப்பத்தூர் 212, திருவண்ணாமலை 263 மற்றும் ராணிப்பேட்டை 222 பேர் என இந்த மாவட்டங்களில் 1,456 பேர் லைசன்சு பெற்று துப்பாக்கி வைத்துள்ளனர்.

விதிமுறைகளின்படி, மாவட்ட மாஜிஸ்திரேட் என்ற முறையில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான மாவட்ட காவல்துறையின் ஒப்புதலைப் பெற்ற பிறகு விண்ணப்பதாரர்கள் துப்பாக்கி லைசென்சு உரிமத்தை வழங்கவும் புதுப்பிக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் ராணுவ வீரர் அவரது தம்பியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவத்தை தொடர்ந்து லைசென்ஸ் வெற்றி பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்களிடம் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கி லைசென்ஸ் புதுப்பிக்கப்பட்டு உள்ளதா மேலும் அவர்கள் எத்தனை குண்டுகள் பயன்படுத்தி உள்ளனர். போலி துப்பாக்கி குண்டுகள் வைத்துள்ளார்களா என சோதனை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் துப்பாக்கிச் சூடு சம்பவங்களை தடுக்க முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சோதனையின் போது மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள் சட்டவிரோத ஆயுதங்களை, முக்கியமாக இரட்டை குழல் துப்பாக்கிகளை வைத்திருப்பவர்களை போலீசார் தானாக முன்வந்து சரணடையச் செய்கிறார்கள்.

வேலூர், திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள 300 க்கும் மேற்பட்ட பழங்குடியின குக்கிராமங்களை உள்ளடக்கிய ஜவ்வாது மலையில் பழங்குடியின மக்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

மலை கிராமங்களில் உள்ளவர்கள் தொடர்ந்து துப்பாக்கி பயன்படுத்தி வருவதால் அவர்களிடமிருந்து துப்பாக்கிகளை பறிமுதல் செய்வது தானாக போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க செய்வதில் போலீசாருக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News