உள்ளூர் செய்திகள்
விபத்து ஏற்பட்ட கல்குவாரியில் மீட்பு பணி

நெல்லை கல்குவாரியில் சிக்கியிருந்த 5-வது நபரின் உடல் மீட்பு

Published On 2022-05-18 13:50 GMT   |   Update On 2022-05-18 13:50 GMT
4-ம் நாளாக நடைபெற்று வரும் மீட்பு பணியின்போது கல்குவியலுக்குள் சிக்கியிருந்த 5-வது நபரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமிதிப்பான் குளத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் கடந்த 14-ம் தேதி ராட்சத பாறை உருண்டு விபத்துக்குள்ளானது. இதில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் பாறைகளின் இடிபாடுகளில் சிக்கினர்.

மேலும் அங்கு நின்ற லாரி மற்றும் பொக்லைன் எந்திரங்களும் இடிபாடுகளில் சிக்கியது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று கயிறு மூலம் குவாரிக்குள் இயங்கி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
 
அப்போது இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்த விட்டிலாபுரத்தை சேர்ந்த முருகன் (வயது 40), நாட்டார்குளத்தை சேர்ந்த விஜய் (27) ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் 3-வது நபரான இளையநயினார் குளத்தை சேர்ந்த செல்வம் உயிருடன் மீட்கப்பட்டார். ஆனால் அவர் சில மணி நேரங்களிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதற்கிடையே பாறை சரிவில் சிக்கிய காக்கைகுளத்தை சேர்ந்த செல்வகுமார் (30), தச்சநல்லூர் ஊருடையான்குளத்தை சேர்ந்த ராஜேந்திரன், ஆயன்குளத்தை சேர்ந்த முருகன் (23) ஆகிய 3 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதில், நேற்று 4-வது நபர் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில், கல்குவாரி விபத்தில் உயிரிழந்த மேலும் ஒரு நபரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. 4-ம் நாளாக நடைபெற்று வரும் மீட்பு பணியின்போது கல்குவியலுக்குள் சிக்கியிருந்த 5-வது நபரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

கல்குவாரி விபத்தில் சிக்கிய 6 பேரில் இதுவரை 3 பேர் சடலமாகவும், 2 பேர் உயிருடனும் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்.. இலங்கைக்கு நிவாரண பொருட்கள்- முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்
Tags:    

Similar News