உள்ளூர் செய்திகள்
இந்து முன்னணியினர் 2-வது நாளாக போராட்டம் நடத்திய போது எடுத்த படம்.

நெல்லை மருத்துவ கல்லூரி டீன் அலுவலகம் முன்பு இந்து முன்னணியினர் 2-வது நாளாக போராட்டம்

Published On 2022-05-13 10:02 GMT   |   Update On 2022-05-13 10:02 GMT
நெல்லை மருத்துவ கல்லூரி டீன் அலுவலகம் முன்பு இந்து முன்னணியினர் இன்று 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
நெல்லை:

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையை சேர்ந்தவர் சின்னதம்பி. இந்து முன்னணி நகர துணைத்தலைவர்.

இவரது மனைவி முருகலட்சுமி நெல்லை ஐகிரவுண்டு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார்.

இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்நிலையில் டாக்டர்கள் அஜராக்கிரதையால் முருகலட்சுமி இறந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் முருகலட்சுமியின் சாவுக்கு நீதிகேட்டு நேற்று இந்துமுன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி டீன் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் இன்று 2-வது நாளாக மருத்துவ கல்லூரி டீன் அலுவலகம் முன்பு இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநில செயலாளர் குற்றாலநாதன் ஆகியோர் தலைமையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் பாளை போலீஸ் உதவி கமிஷனர் விவேகானந்தன் பேச்சு–வார்த்தை நடத்தினார். அப்போது முருகலட்சுமி சாவுக்கு காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், முருகலட்சுமியின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்.

அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

Tags:    

Similar News