உள்ளூர் செய்திகள்
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பூசி முகாமை மேயர் சரவணன் தொடங்கி வைத்தார்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்களில் ஆர்வத்துடன் திரண்ட மக்கள்

Published On 2022-05-08 09:45 GMT   |   Update On 2022-05-08 09:45 GMT
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் திரண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
நெல்லை:

 கொரோனா 4-வது அலை பரவாமல் தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த அலையின் போது தீவிரமாக இருந்த தொற்று பரவல் மெகா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதால் பரவல் வேகம் வெகுவாக குறைந்தது. அந்த வகையில் தற்போது மெகா தடுப்பூசி முகாம்கள் மீண்டும் நடத்தப்பட்டு வருகிறது. 

நெல்லை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 90 சதவீதம் பேர் செலுத்தி உள்ளனர். இந்த எண்ணிக்கையை மேலும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  

குறிப்பிட்ட காலம் கடந்தும்  2-வது தவணை செலுத்தாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் நினைவூட்டப்பட்டு வருகிறது. மேலும் அவர்களின் செல்போன்கள் மூலமும் தொடர்பு  கொண்டு  தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதேபோல் முதல் 2 தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் 3-வது சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. மாநகராட்சி பகுதியில் மட்டும் 266 சிறப்பு முகாம்கள் மற்றும் 18 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு   700 பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நடந்த முகாமை மாநகராட்சி மேயர் சரவணன் தொடங்கி  வைத்தார். முகாமில் தகுதியுள்ள ஏராளமான பயணிகள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். நிகழ்ச்சியில் துணை மேயர் கே.ஆர். ராஜூ, நகர்நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர் பெருமாள், உதவி செயற்பொறியாளர் லெனின்  உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் 9 நகர்ப்புற சுகாதார மையங்கள், கலெக்டர் அலுவலகம், வண்ணார் பேட்டை ரவுண்டானா, பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் வீடு, வீடாக சென்று 2-வது தவணை விடுபட்டவர்களுக்கும், பூஸ்டருக்கு தகுதியானவர்களுக்கும்  தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதுதவிர 9 யூனியன் பகுதிகளில் 1,734 முகாம்கள், 119 நடமாடும் குழுக்கள் என 1,853 முகாம்கள் மூலம் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.  ஒட்டுமொத்தமாக இன்று நெல்லை மாவட்டத்தில் 2,137 சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளிலும் தலா 3 குழுக்கள் விகிதம் சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூர், ஆலங்குளம், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட  கிராம பஞ்சாயத்து பகுதிகள், பேரூராட்சி பகுதிகள், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.  

இன்றைய முகாமை பயன்படுத்தி 2-வது தவணை மற்றும் பூஸ்டர்  தடுப்பூசி போடாதவர்கள்  தடுப்பூசிகள் செலுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதன்படி இன்று அதிகாலை முதலே பல முகாம்களில் பொதுமக்கள் தாமாக திரண்டு வந்து தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மாநகராட்சி பகுதியில் மட்டும் 200 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், தூத்துக்குடி, ஆழ்வார்திருநகரி, கருங்குளம், கோவில்பட்டி, கயத்தாறு, பேரிலோவன்பட்டி, புதூர், ஓட்டப்பிடாரம் என மாவட்டம் முழுவதும் இன்று 1001 இடங்களில் சிறப்பு முகாம்கள் மற்றும் நடமாடும் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது. 

இதற்காக  ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள்,  சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. 

இந்த பணிக்காக மருத்துவத்துறை, வருவாய்த்துறை, ஊரக மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், போலீசார் உள்ளிட்டவர்கள் ஈடுபடுத்தபட்டிருந்தனர்.

 மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கலெக்டர்கள் விஷ்ணு (நெல்லை), கோபால சுந்தரராஜ் (தென்காசி), செந்தில்ராஜ் (தூத்துக்குடி) ஆகியோர் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை பார்வையிட்டனர். 
Tags:    

Similar News