உள்ளூர் செய்திகள்
அதிமுக

உள்கட்சி தேர்தல் முடிவுகள்- தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க. சமர்ப்பித்தது

Published On 2022-04-30 09:26 GMT   |   Update On 2022-04-30 09:26 GMT
மே 10ந்தேதி வரை சட்டசபை கூட்டம் நடைபெறுவதால் அந்த கூட்டம் முடிந்த பிறகு அ.தி.மு.க. பொதுக்குழுவை கோலாகலமாக நடத்த அ.தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது.
சென்னை:

அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு அரசியல் கட்சியும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்பது தேர்தல் கமிஷனின் நிபந்தனை ஆகும்.

இதன்படி ஒவ்வொரு கட்சியிலும் நிர்வாகிகள் தேர்தலை நடத்தி தேர்தல் கமிஷனில் சமர்ப்பித்து வருகின்றனர்.

அ.தி.மு.க.வில் ஜெயலலிதா இருந்தபோது 2014ம் ஆண்டு உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. அவரது மறைவுக்கு பிறகு 2019ம் ஆண்டு தேர்தல் நடத்தி இருக்க வேண்டும். அந்த கால கட்டத்தில் கொரோனா பரவல் தொடங்கியதால் உட்கட்சி தேர்தலை நடத்த முடியவில்லை.

அதுமட்டுமின்றி ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்தடுத்து நடைபெற்ற காரணத்தால் கட்சி தேர்தலை உடனே நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதுபற்றி தேர்தல் கமிஷனில் எடுத்துக்கூறி அ.தி.மு.க. சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

முதற்கட்டமாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்களாக முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், இணை செயலாளர் வழக்கறிஞர் ராதாபுரம் இன்பதுரை ஆகியோர் டெல்லி சென்று கடந்த டிசம்பர் 7ந்தேதி தேர்தல் கமிஷனுக்கு தகவல் தெரிவித்தனர். மற்ற பதவிகளுக்கான தேர்தலையும் விரைந்து நடத்தி முடிவுகளை தேர்தல் கமிஷனுக்கு தெரிவிப்பதாக கூறியிருந்தனர்.

இதையொட்டி அ.தி.மு.க.வில் வார்டு அளவில் வட்ட செயலாளர், பிரதிநிதி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளுக்கும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக நகரம், ஒன்றியம், பேரூர் கழக செயலாளர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடந்தது. இறுதியாக மாவட்ட செயலாளர்களுக்கும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.

மொத்தம் 75 மாவட்ட செயலாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக 74 தலைமைக் கழக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். அ.தி.மு.க.வின் அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட தகவலை கட்சியின் தேர்தல் பிரிவு இணை செயலாளர் வழக்கறிஞர் ராதாபுரம் இன்பதுரை டெல்லி தேர்தல் கமிஷனில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட விவரங்களை பட்டியலாக சமர்பித்தார்.

அ.தி.மு.க.வுக்கு அனைத்து மட்டங்களிலும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதால் இதுபற்றி கட்சியின் பொதுக்குழுவில் அங்கீகாரம் பெற வேண்டும். இதற்காக அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு விரைவில் கூட உள்ளது.

மே 10ந்தேதி வரை சட்டசபை கூட்டம் நடைபெறுவதால் அந்த கூட்டம் முடிந்த பிறகு அ.தி.மு.க. பொதுக்குழுவை கோலாகலமாக நடத்த அ.தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது.
Tags:    

Similar News