உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

அதிகாலை இயக்கப்பட்ட திருப்பூர்- உடுமலை பஸ்களை மீண்டும் இயக்க கோரிக்கை

Published On 2022-04-29 06:48 GMT   |   Update On 2022-04-29 06:48 GMT
திருப்பூரில் இருந்து அதிகாலை நேரங்களில் வர வேண்டிய பயணிகள்பலமணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.
உடுமலை:

திருப்பூரிலிருந்து பல்லடம் ,கேத்தனூர், ஜல்லிப்பட்டி, செஞ்சேரி புத்தூர், குடிமங்கலம் வழியாக உடுமலைக்கு அதிகாலை 2 மணி, 3 மணி மற்றும் 4 மணிக்கு அரசு பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வந்தன.

விவசாயிகளும் தங்களது விளைப்பொருட்களை உழவர் சந்தைக்கு கொண்டு வரவும் பொதுமக்கள் ரெயில்கள் வழியாக திருப்பூர் வந்து இறங்கி குடிமங்கலம்  உடுமலை, மடத்துக்குளம், மறையூர் மற்றும் மூணாறு செல்ல அதிகாலையில் இயக்கப்பட்ட பஸ்கள் வசதியாக இருந்தது.

இதுனை அதிக அளவு பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில் கொரோனா காலத்தில் அதிகாலையில் இயக்கப்பட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டன. மேலும் தற்போது இயல்பான நிலை ஏற்பட்டும் அரசு போக்குவரத்து கழகம் வாயிலாக இயக்கப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக்கப்படவில்லை.

இதனால் திருப்பூரில் இருந்து அதிகாலை நேரங்களில் வர வேண்டிய பயணிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.அதேபோல் திருப்பூர் ரோட்டில் உள்ள கிராமங்களிலிருந்து விவசாயிகள் விளைப்பொருட்களை ஒருமுறை உழவர் சந்தைக்கும் நகராட்சி சந்தைக்கும் கொண்டு வர முடியாமல் அவை வீணாகின்றன.

மாவட்டத் தலைநகராக உள்ள திருப்பூருக்கு பொதுமக்கள் பல்வேறு  பணிகளுக்கு  சென்று வரவும் அரசு அலுவலகங்களுக்கும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களுக்கும் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் நகரம் மற்றும் கிராமங்களில் சென்று வரும் நிலையில் அவர்கள் வசதிக்காக உடுமலையில் இருந்து திருப்பூருக்கு அதிகாலை முதல் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.

இதற்கு போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News