உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

மீண்டும் அதிகரிக்கும் பாலித்தீன் கவர்கள் பயன்பாடு - அதிகாரிகள் கண்காணித்து பறிமுதல் செய்ய வேண்டுகோள்

Published On 2022-04-27 09:41 GMT   |   Update On 2022-04-27 09:41 GMT
திருப்பூர் பகுதியில் குறைந்த பாலிதீன் பொருள் பயன்பாடு தற்போது அதே வேகத்தில் அதிகரித்து வருகிறது.
திருப்பூர்:

தமிழகம் முழுவதும் கடந்த 2019-ம் ஆண்டு  ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள், டம்ளர், தட்டு ஆகியவற்றுக்கு தமிழக அரசு தடை விதித்தது. பால், எண்ணை போன்ற உணவுப்பொருள் தவிர்த்த பிற பயன்பாடுகளுக்கு தடை விதித்ததோடு, பயன்படுத்துவோர் மற்றும் விற்பனையாளர் மீது அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனால் திருப்பூர் பகுதியில் குறைந்த பாலிதீன் பொருள் பயன்பாடு தற்போது அதே வேகத்தில் அதிகரித்து வருகிறது. ஓட்டல் மற்றும் டீ ஸ்டால்களில் உணவு பொருள் பார்சல், மளிகை மற்றும் காய்கறி கடைகள், பூ மார்க்கெட்களில் பாலிதீன் பைகள் பயன்பாடு, பல மடங்கு அதிகரித்துவிட்டது.

திருப்பூர் மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதியில் 250 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இவற்றில் தினமும் பல ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் டம்ளர்கள் பயன்படுத்தப்படுகிறது. இவை தினமும் மூட்டை, மூட்டையாக குப்பை வாகனங்கள் மூலம் அகற்றப்படுகிறது. 

சில இடங்களில் பார் உரிமையாளர்கள் அவற்றை இரவோடு இரவாக மூட்டை கட்டி ஆங்காங்கே கேட்பாரற்ற நிலங்கள் மற்றும் நீர் வழிப் பாதைகளில் கொட்டி செல்கின்றனர். நகரப்பகுதியில் கடைகளில் புழங்கும் பாலிதீன் கவர்கள், காலியான தண்ணீர் பாட்டில், குளிர் பான பாட்டில்கள் மழை நீர் மற்றும் சாக்கடை கால்வாய்களில் வீசியெறியப்படுகிறது.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மார்க்கெட் கடைகள் தவிர ஆயிரக்கணக்கான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு பாலிதீன் பைகளில் பொருட்கள் பேக் செய்து தருவதும், ஓட்டல் மற்றும் டீக்கடைகளில் உணவுப் பொருட்களும் பார்சல் செய்து வழங்கப்படுகிறது. 

இதுகுறித்து மாநகராட்சி சுகாதார பிரிவினர் கூறுகையில்:

‘’கடந்த 2ஆண்டுகளாக கொரோனா பரவல் தடுப்பு, டெங்கு காய்ச்சல் தடுப்பு போன்ற பணிகள் அதிகளவில் இருந்தது. இதன் காரணமாக பாலிதீன் பயன்பாடு குறித்த கண்காணிப்பில் தொய்வு ஏற்பட்டது. இதனால் கடைகளில் இதன் புழக்கம் அதிகரித்துவிட்டது.

தற்போது மாநகராட்சி நிர்வாகம் இது குறித்து தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளது. விரைவில் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.
Tags:    

Similar News