உள்ளூர் செய்திகள்
குப்பைக்கிடங்கில் தீ விபத்தை தடுக்க லாரிகள் மூலம் தண்ணீர் அடிக்கப்பட்ட காட்சி.

தீ விபத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Published On 2022-04-24 09:50 GMT   |   Update On 2022-04-24 09:50 GMT
ராமையன்பட்டி குப்பை கிடங்கில் தீ விபத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
நெல்லை:

நெல்லை மாநகராட்சி பகுதியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இந்த 55 வார்டுகளும் 4 மண்டலங்களாகப்பிரிக்கப்பட்டுள்ளது. 

மாநகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் தூய்மை பணியாளர்களால் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது. 

இந்த குப்பைகள் தச்சை மண்டலத்துக்கு உட்பட்ட ராமையன்பட்டியில் கொட்டப்பட்டு அங்கு உரமாக்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு கடும் புகை மூட்டம் ஏற்படுவதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்-களுக்கு உடல் ரீதியான பாதிப்பு ஏற்படுகிறது. 

எனவே அந்த குப்பை கிடங்கை அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் குப்பை கிடங்கில் தீ பரவுவதை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெயில் காலங்களில் குப்பைகள் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் விஷ்ணு சந்திரன் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் அறிவுறுத்தி இருந்தார். 

அதனடிப்படையில் தச்சை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் ராமையன்பட்டி குப்பை கிடங்கில் இன்று லாரிகள் மூலமாக தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு குப்பைகள் மீது பீய்ச்சி அடிக்கப்பட்டது. 

கடுமையான வெயில் காரணமாக குப்பை கிடங்கில் தீ ஏற்படாமலிருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இனிவரும் கோடைகாலங்களில் அவ்வப்போது இதுபோன்று செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து குப்பைகளை ஜேசிபி எந்திரம் மூலம் ஒரே இடத்தில் குவித்து வைக்கும் பணியும் நடைபெற்றது.
Tags:    

Similar News