உள்ளூர் செய்திகள்
திருப்பூர் குமரன் ரோடு புனித கேத்ரீன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

ஈஸ்டர் திருநாளையொட்டி திருப்பூர் ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

Published On 2022-04-17 08:21 GMT   |   Update On 2022-04-17 08:21 GMT
கிறிஸ்தவர்கள் புத்தாடை உடுத்தி தங்கள் மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு தங்களால் ஆன உதவிகளை செய்தனர்.
திருப்பூர்:

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரித்ததன் மூலம் அவர் இந்த உலகின் பாவங்கள் அனைத்தையும் தானே எடுத்து கொண்டார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.புனித வெள்ளியன்று சிலுவையில் அறையப்பட்ட இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த நிகழ்வான ஈஸ்டர் திருநாள்’ இன்று கொண்டாடப்பட்டது. 

இதையொட்டி திருப்பூரில் பங்களா ஸ்டாப் சி.எஸ்.ஐ., ஆலயம், தூய பவுல் ஆலயம், குமார் நகர் சி.எஸ்.ஐ., ஆலயம், காங்கயம் ரோடு நல்லூர் ஆலயம் ,புனித கத்தரினம்மாள் ஆலயம், சூசையப்பர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் நள்ளிரவு திருப்பலிகள் நடந்தன.

இதில் கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இன்று காலை சிறப்பு ஆராதனை, திருப்பலிகள் நடைபெற்றது. இதேப்போல் மாவட்டத்திற்குட்பட்ட உடுமலை, பல்லடம், தாராபுரம், காங்கேயம் உள்பட பல்வேறு ஆலயங்களில் ஈஸ்டர்தினத்தையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.  

மேலும் கிறிஸ்தவர்கள் புத்தாடை உடுத்தி தங்கள் மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு தங்களால் ஆன உதவிகளை செய்தனர். 

இதுகுறித்து கிறிஸ்தவர்கள் கூறுகையில்:

ஆண்டவர் ஏசு, மனிதன் மீதுள்ள அன்பால் அவனை பாவத்தில் இருந்து மீட்க வேண்டும் என்பதற்காக  கடவுள் என்ற தன்மையில் இருந்து இறங்கி  மண்ணில் மனிதனாக அவதரித்தார். மக்களை நல்வழிப்படுத்தினார். பல அதிசய, அற்புதங்களை செய்தார் என ‘பைபிள்’ சொல்கிறது. நல்ல ஆயன் நானே, என் ஆடுகளை நான் அறிவேன் எனக்கூறிய அவர், தன் மக்கள் மீட்பு பெற வேண்டும் என்பதற்காக சிலுவை சாவையே ஏற்றார். மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். உலக வரலாற்றில் எந்தவொரு மனிதனும் இறந்து மீண்டும் உயிர்பெற்றதாக இல்லை.

ஆனால், ஏசு தான் வாழ்ந்த காலத்தில் இறந்தவர்களை உயிர்ப்பெற செய்தார். நல்லவர்களாக வாழ்ந்து மரிக்கும்போது ஏசுவோடு, விண்ணக ராஜ்ஜியத்தில் இருப்பார்கள். 

இது உலக வாழ்க்கை போன்று அல்லாமல், மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும் என்பது தான் கிறிஸ்தவத்தின் தத்துவம். எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், நல்லவர்களாக வாழ்ந்து இறக்கும்போது இறைவனின் ராஜ்ஜியத்தில் இடம் கிடைக்கும். எனவே  பாவ நாட்டங்கள், உலக ஆசாபாசங்களை துறந்து ஏசுவின் போதனைப்படி நடக்க வேண்டும் என்பதை ஈஸ்டர் பெருநாள் உணர்த்துகிறது என்றனர்.
Tags:    

Similar News