உள்ளூர் செய்திகள்
கொடைக்கானல்

கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்

Published On 2022-04-16 03:07 GMT   |   Update On 2022-04-16 03:07 GMT
மழையின் காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.
கொடைக்கானல்:

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானல் பகுதியில் தற்போது குளுகுளு சீசன் தொடங்கி உள்ளது. 4 நாட்கள் தொடர் விடுமுறை நாளையொட்டி சீசனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. நேற்று அதிகாலை முதலே சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். இதனால் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

டைகர் சோலை முதல் அப்சர்வேட்டரி வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர். குறிப்பாக கொடைக்கானல் பஸ் நிலையத்தில் இருந்து கோக்கர்ஸ்வாக் செல்லும் லாயிட்ஸ் ரோடு பகுதியில் இருபுறமும் வாகனங்கள் சாலையை மறித்து நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் அந்த வழியாக காரைக்குடி நோக்கி சென்ற அரசு பஸ் செல்ல முடியாமல் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்திய பிறகு அந்த பஸ் புறப்பட்டு சென்றது.

இதற்கிடையே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. தனியார் தங்கும் விடுதிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக சுற்றுலா பயணிகள் புகார் தெரிவித்தனர். மேலும் கொடைக்கானலில் நேற்று காலையில் வெப்பம் நிலவியது. தொடர்ந்து பிற்பகல் 3 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது. மாலை 6 மணி முதல் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. மோயர் பாயிண்ட் பகுதியில் மலையில் தவழ்ந்து சென்ற மேக கூட்டத்தை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். மழையின் காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  


Tags:    

Similar News