உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

பணியிடத்தில் தொந்தரவு இருந்தால் பெண்கள் தைரியமாக புகார் அளிக்க வேண்டும்- மகளிர் ஆணைய தலைவர் அறிவுறுத்தல்

Published On 2022-04-10 08:28 GMT   |   Update On 2022-04-10 08:28 GMT
அனைத்து மாவட்டங்களிலும், பெண்களுக்கான, மனநல கவுன்சிலிங் சேவை சிறப்பாக நடந்து வருகிறது.
திருப்பூர்:

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில், தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி ஆய்வு மேற்கொண்டார்.

கலெக்டர் வினீத், மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் முன்னிலை வகித்தனர்.

அப்போது மகளிர் ஆணைய தலைவர் பேசியதாவது:-

திருப்பூர் உட்பட  பல்வேறு மாவட்டங்களில், பெண்கள் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், பெண்களுக்கான, மனநல கவுன்சிலிங் சேவை சிறப்பாக நடந்து வருகிறது. தமிழகத்தில் ‘போக்சோ’ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், தைரியமாக புகார் அளிக்க முன்வருகின்றனர். குற்றவாளிகளும், ‘போக்சோ’ சட்டப்பிரிவுகளில் தண்டிக்கப்படுகின்றனர். 

நூற்பாலை உள்ளிட்ட இடங்களில்  தங்கி பணியாற்றும் பெண்கள் பாதுகாப்பில், மாவட்ட நிர்வாகம், சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குடும்ப வருமானம் போதாமல் தான், பெண்கள் வேலைக்கு செல்கின்றனர்.

பணியிடத்தில் முழுமையான பாதுகாப்புடன், நிம்மதியாக பணிபுரிய, கட்டமைப்பு உருவாக்கி கொடுக்க வேண்டும்.

ஊரடங்கின் போது, பெண் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து அஞ்சியதால் அதிக அளவு குழந்தை திருமணம் நடந்துள்ளது. பள்ளியில், மாணவிகள் இடைநிற்றல் இருந்தால், உடனடியாக, மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் அளிக்க வேண்டும். 

நகரம், கிராமப்புற மக்களிடையே, விசாகா கமிட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பணியிடத்தில் எத்தகைய தொந்தரவு இருந்தாலும், தைரியமாக புகார் அளிக்க வேண்டும். மாறாக வேலை கிடைக்காது என அஞ்சி, புகார் செய்யாமல் இருக்க கூடாது.  

இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்டத்தில், பெண்களுக்கான ‘181’ என்ற ‘ஹெல்ப்லைன்’ மூலம், இரண்டு ஆண்டுகளில், 1,030 பேர் புகார் அளித்துள்ளனர்; ஆயிரம் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. 30 வழக்குகள் விசாரணையில் உள்ளன. குடும்ப வன்முறை தொடர்பாக, 431 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குழந்தை திருமணம் தொடர்பாக 160 பேர் புகார் அளித்துள்ளனர். ஒவ்வொரு புகாரின் மீதும், தாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மகளிர் ஆணைய தலைவர் குமரி தெரிவித்தார்.  
Tags:    

Similar News