உள்ளூர் செய்திகள்
தற்கொலை

நெல்லை விடுதியில் கடிதம் எழுதி வைத்து விட்டு சென்னை தொழில் அதிபர் தற்கொலை

Update: 2022-04-07 09:29 GMT
நெல்லை விடுதியில் சென்னை தொழில் அதிபர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? குடும்ப பிரச்சினை காரணமா? அல்லது தொழில் பிரச்சினையா? வேறு ஏதேனும் காரணமா? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

காஞ்சிபுரம் மாவட்டம் மடிப்பாக்கம் கணேஷ்நகரை சேர்ந்தவர் முராரி சந்தானம் (வயது 45). தொழில் அதிபர். இவருக்கு திருமணமாகி 3 வயதில் குழந்தை உள்ளது.

கடந்த 27-ந் தேதி வீட்டில் உள்ளவர்களிடம் முராரி சந்தானம் நெல்லை செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்தார்.

விடுதியில் இருந்த அவர் தினமும் வெளியே சென்று வந்துள்ளார். விடுதி ஊழியர்களிடம் இன்று விடுதியை காலி செய்வதாக நேற்று இரவு கூறி சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று வெகுநேரமாகியும் அவரது அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் மாற்று சாவியை கொண்டு அறையை திறந்து பார்த்தனர்.

அப்போது அங்குள்ள மின்விசிறியில் முராரி சந்தானம் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார். உடனடியாக அவர்கள் சந்திப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது அறையில் அவர் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார்.

அதில் எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. இது நானே எடுத்த முடிவு. எனது உடலையும், உடமைகளையும் எனது அண்ணன், மதனியிடம் ஒப்படைத்து விடுமாறு எழுதியிருந்தார்.

மேலும் அதில் அவர்களது செல்போன் எண்களும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை கொண்டு போலீசார் அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசினர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் முராரி சந்தானம் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? குடும்ப பிரச்சினை காரணமா? அல்லது தொழில் பிரச்சினையா? வேறு ஏதேனும் காரணமா? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News