உள்ளூர் செய்திகள்
சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சுகாதார வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்- ராதாகிருஷ்ணன்

Published On 2022-04-05 05:04 GMT   |   Update On 2022-04-05 05:04 GMT
உருமாறிய கொரோனா எந்த வகையில் வந்தாலும் நாம் அதை எதிர்கொள்ள சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடந்தால் தான் ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக வாழ முடியும் என சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை:

தமிழ்நாட்டில் கொரோனா பரவுவது வெகுவாக குறைந்துவிட்ட நிலையில் அரசின் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் முககவசம் அணிவதை கைவிட தொடங்கிவிட்டனர்.

பஸ் நிலையம், ரெயில் நிலையம், மார்க்கெட், கடை வீதிகள் என பல இடங்களில் மக்கள் முககவசம் இன்றி சென்று வருகின்றனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

கடந்த 2 வருடமாக கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டனர். இதில் இருந்து ஒவ்வொருவரும் கற்றுக்கொண்ட பாடம் அதிகமாகும். எனவே கொரோனாவை பொறுத்தவரை அரசின் விதிமுறைகள் இருந்தால்தான் பாதுகாப்பு அம்சங்களை பின்பற்ற வேண்டும் என்று நினைக்க கூடாது. ஒவ்வொருவரும் தங்களது உடல் ஆரோக்கியத்துக்காக, சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இங்கிலாந்தில் தற்போது உருமாறிய கொரோனா பிஏ.-1, பிஏ.-2 ஆகிய இரண்டும் சேர்ந்து ஒமைக்ரான் எக்சி என்ற புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் தமிழ்நாட்டில் பரவாமல் இருக்க கண்காணித்து வருகிறோம். சீனாவின் ஷாங்காய் நகரில் உருமாறிய பிஏ.2 ஒமைக்ரான் பரவி வருவதாக தகவல் வருகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த 3 மாதங்களில் ஒமைக்ரான் பி.1 வைரஸ்தான் அதிகம் பரவியது. அதுவும் இப்போது கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது.

தற்போது இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ள 20 பேர் சிகிச்சையில் உள்ளனர். உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

எனவே உருமாறிய கொரோனா எந்த வகையில் வந்தாலும் நாம் அதை எதிர்கொள்ள சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடந்தால் தான் ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக வாழ முடியும்.

பொருளாதார ரீதியாக யாரும் கஷ்டப்படக்கூடாது என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News