உள்ளூர் செய்திகள்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும்- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

Update: 2022-04-04 08:12 GMT
தவறு செய்யும் திமுக நிர்வாகிகள் மீது பெயரளவில்தான் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை:

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை மாநகர காவல் ஆணையரக வளாகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று 2-வது முறையாக நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

பின்னர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் வெளியாகி உள்ளது. வினாத்தாள் வெளியாவது தொடர்கதையாகி விட்டது. இது பள்ளி கல்வித்துறையின் நிர்வாக சீர்கேட்டை வெளிப்படுத்துகிறது.

சமூகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலைமை உள்ளது. காவல் துறையினருக்கும் பாதுகாப்பு இல்லை. காவல்துறையினரை ஆபாசமாக பேசியவர்கள் மீது நடவடிக்கை இல்லை. தவறு செய்யும் திமுக நிர்வாகிகள் மீது பெயரளவில்தான் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

சட்டம்-ஒழுங்கு மோசம் அடைந்துள்ளது. பெண்கள் பங்களிப்பு நிர்வாகத்தில் இருக்க வேண்டும் என 50 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர் ஜெயலலிதாதான். பெண்கள் சுயமாக செயல்பட வேண்டும் என இந்த இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார். ஆனால் திமுக சார்பில் போட்டியிட்ட பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் தவறாக செயல்படுகின்றனர்.

தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதை செய்ய வேண்டும். அவ்வாறு குறைத்தாலே பெரிய சுமையை குறைக்க முடியும். தமிழக பொருளாதாரம் உயரும் வகையில் சொத்து வரியை நீக்கி விடுவோம் என்றும் தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள். ஆனால் அதையும் அவர்கள் செய்யவில்லை.

இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறினார்.


Tags:    

Similar News