உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கடனுக்கான மானியம் கிடைக்காமல் தவிக்கும் மகளிர் குழுக்கள்- விவசாயிகள்

Published On 2022-03-10 04:03 GMT   |   Update On 2022-03-10 04:03 GMT
விவசாயிகள் ‘போர்வெல்’ அமைத்து சிறு பாசன கட்டமைப்புக்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படுகிறது.
திருப்பூர்:

தமிழக அரசின்  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் ‘டாப்செட்கோ’ திட்டத்தில்  மகளிர் குழுவினர், சிறு தொழில் முனைவோர் மற்றும் விவசாயிகளுக்கு மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. அதில் தேர்வாகும் பயனாளிகளுக்கு கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக கடன் வழங்கப்படுகிறது. மானிய உதவி துறை வாயிலாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 

விவசாயிகள்  ‘போர்வெல்’ அமைத்து  சிறு பாசன கட்டமைப்புக்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. அதில் 50 சதவீதம் மானியத்தை பல்வேறு விவசாயிகள் பெற்றுள்ளனர். கூட்டுறவு சங்கங்கள் கடன் வழங்கினாலும், ‘டாப்செட்கோ’ திட்டத்தில் அதற்கான மானியம் கிடைக்கவில்லை. இதனால்  கடந்த சில ஆண்டுகளாக வட்டியும், அபராத வட்டியும் செலுத்தி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் சிலர் கூறியதாவது:

டாப்செட்கோ திட்டத்தில் 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. பல மாவட்டங்களில் 2018 முதல், மானியம் கிடைக்கவில்லை. இதனால் வட்டியும், அபராத வட்டியும் செலுத்தி வருகிறோம்.

ஒரு லட்சம் ரூபாய் கடன்பெற 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி செலுத்தி வட்டி, அபராத வட்டி செலுத்துவதால் 50 சதவீத மானியம் சரியாக போய்விடும். எனவே நிலுவையில் உள்ள விவசாயிகளுக்கு விரைவில் மானியத்தை விடுவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News