உள்ளூர் செய்திகள்
வானிலை நிலவரம்

தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Published On 2022-03-06 05:18 GMT   |   Update On 2022-03-06 05:18 GMT
தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, புதுச்சேரியில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது.

இது தமிழக கடலோர பகுதியில் 300 கி.மீட்டர் தொலைவில் நிலை கொண்டு இருந்தது. தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டது.

இந்தநிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. மேலும் அது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது.

இது வட தமிழக கடலோர பகுதியை நோக்கி நகர்கிறது. சென்னைக்கு கிழக்கு, தென்கிழக்கே 280 கி.மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கே 290 கி.மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, புதுச்சேரியில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சி மற்றும் புதுச்சேரியில் நாளை மிக கனமழையும், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 8-ந் தேதி கனமழை பெய்யும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் மணிக்கு 40 கி.மீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு, மத்திய மேற்கு, மன்னார்வளைகுடா, தமிழக வடக்கு மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளில் இன்றும், மத்திய மேற்கு, தென்மேற்கு, தமிழக வடக்கு மற்றும் ஆந்திராவின் தெற்கு வங்கக்கடலோர பகுதிகளில் நாளையும் மணிக்கு 70 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.


Tags:    

Similar News