உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

திருப்புதல் தேர்வு விடைத்தாள் மறு மதிப்பீடு வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும்- மாணவர்கள் வலியுறுத்தல்

Published On 2022-02-18 05:49 GMT   |   Update On 2022-02-18 05:49 GMT
தேர்வு நாளன்று இருபிரிவினருக்கான வினாத்தாள்கள் மையத்தில் இருந்து காலையிலேயே ஒரே நேரத்தில் பெறப்பட்டு வந்தது.
திருப்பூர்:

தமிழகத்தில் 10 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வைப்போல் திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது. உடுமலை கல்வி மாவட்ட பள்ளிகளில் 3, 954 மாணவர்கள் திருப்புதல் தேர்வை எழுதி வருகின்றனர். தேர்வுக்கு பின் விடைத்தாள்கள் கடும் கட்டுப்பாடுகளுடன் திருத்தம் செய்யப்படவும் உள்ளது. 
'
பின்னர் மதிப்பெண் பட்டியல் தயாரித்து மாணவர்களிடம் அளிக்கப்படவுள்ளது. 

இந்நிலையில் விடைத்தாள் மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டல் குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

10 மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் உயர்கல்வி பயில, மதிப்பெண் பட்டியல் அவசியம். அதற்கேற்ப திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது.

பொதுத்தேர்வைப்போல் திருப்புதல் தேர்வு நடத்தப்படுவதால் திருத்தம் செய்யப்பட்ட விடைத்தாள்கள் மாணவர்களிடம் அளிக்கப்படாது. மதிப்பெண் பட்டியல் மட்டுமே வழங்கப்படும். 

அவ்வாறு இருக்கையில் விடைத்தாளில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் குறைந்து விட்டதாககருதினால் அவர்களின் விடைத்தாளை மறுமதிப்பீடு செய்யவும் மதிப்பெண்களை மறுகூட்டல் செய்யவும் வாய்ப்பு அளிக்க வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்களை அரசு தேர்வுத்துறை இன்னும் அறிவிக்கவில்லை. 

இவ்வாறு அவர்கள் கூறினர்.

உடுமலை கல்வி மாவட்டத்திற்கு உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வினாத்தாள் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

காலையில் வினாத்தாள் பெறப்பட்டு, 10-ம்வகுப்புக்கு காலை 10 மணி முதல், மதியம் 1மணி வரையும், பிளஸ்-2 வகுப்புக்கு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால் 10, பிளஸ்-2 வினாத்தாள்கள் ‘லீக்‘ ஆனதைத் தொடர்ந்து மையத்தில் இருந்து வினாத்தாள் பெறுவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,

தேர்வு நாளன்று இரு பிரிவினருக்கான வினாத்தாள்கள் மையத்தில் இருந்து, காலையிலேயே ஒரே நேரத்தில் பெறப்பட்டு வந்தது. தற்போது 10-ம் வகுப்பு வினாத்தாள்களை காலையிலும், மதியம் 12 மணிக்கு மேல் பிளஸ்-2 தேர்வுக்கான வினாத்தாள்களை பெற்றுச்செல்லவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.
Tags:    

Similar News