உள்ளூர் செய்திகள்
கைது

விழுப்புரத்தில் போலீஸ் அதிரடி கஞ்சா விற்ற வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது

Update: 2022-01-29 10:09 GMT
விழுப்புரத்தில் போலீஸ் அதிரடி கஞ்சா விற்ற வடமாநில வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்:

ஒடிசா மாநிலத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி விழுப்புரம் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு டில்லிபாபு மற்றும் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ தலைமையிலான போலீசார் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த வாலிபர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபர்களிடம் சோதனை செய்தனர். சோதனையில் 6 கிலோ கஞ்சா பாக்கெட்டுகளை அவர்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

உடனே போலீசார் அந்த வாலிபர்கள் 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

கைது செய்யப்பட்ட வாலிபர்கள் 2 பேரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிஸ்வால் ராணா (வயது 27) சித்தேஸ்வர் போயி (25) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் ஒடிசா மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வந்து விழுப்புரம் சேலம் திருப்பூர் ஆகிய பகுதிகளில் வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News