உள்ளூர் செய்திகள்
கொட்டாரம் முதல் நிலை பேரூராட்சி அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

போலீஸ் பாதுகாப்புடன் வேட்புமனுத் தாக்கல்

Published On 2022-01-28 08:34 GMT   |   Update On 2022-01-28 08:34 GMT
கன்னியாகுமரி, கொட்டாரம் பேரூராட்சி அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது.
கன்னியாகுமரி:

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி போன்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்கியது. 

வேட்புமனு தாக்கல் செய்ய அடுத்த மாதம் 4-ந் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் பரிசீலனை 5-ந்தேதி நடக்கிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற 7-ந் தேதி கடைசி நாளாகும்.

இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி மற்றும் கொட்டாரம் முதல் நிலை பேரூராட்சி அலுவலகங்களில் இன்று காலை 10 மணிக்கு வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. 

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியின் தேர்தல் அதிகாரியாக பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும் 1-வது வார்டு முதல் 9- வது வார்டு வரை உள்ள 9 வார்டுகளுக்கான உதவி தேர்தல் அதிகாரியாக அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்த விஜயன் நியமிக்கப்பட்டு உள்ளார். 

10-வது வார்டு முதல் 18-வது வார்டு வரை உள்ள 9 வார்டுகளுக்கான உதவி தேர்தல் அதிகாரியாக மாவட்ட உணவு வழங்கல் அலுவலக துணை தாசில்தார் மேரி ஸ்டெல்லா நியமிக்கப்பட்டு உள்ளார். 

இதேபோல கொட்டாரம் முதல் நிலை பேரூராட்சி தேர்தல் அதிகாரியாக அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்  நீலகண்ட மூர்த்தி நியமிக்கப்பட்டு உள்ளார். 

1-வது வார்டு முதல் 8-வது வார்டு வரையுள்ள 8 வார்டுகளுக்கு உதவி தேர்தல் அதிகாரியாக கன்னியாகுமரி வருவாய் ஆய்வாளர் ரபிநாத் நியமிக்கப்பட்டு உள்ளார். 

9-வது வார்டு முதல் 15-வது வார்டு வரை உள்ள 7 வார்டுகளுக்கான உதவி தேர்தல் அதிகாரியாக  அகஸ்திஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலக முதுநிலை வருவாய்  ஆய்வாளர் அமுத தங்கமலர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியதையொட்டி  கொட்டாரம் முதல் நிலை பேரூராட்சி அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News