உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க 75 பறக்கும் படை அமைப்பு

Published On 2022-01-28 07:24 GMT   |   Update On 2022-01-28 07:24 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் பணப்பட்டு வாடாவை தடுக்க 3 ஷிப்ட்டுகளாக கண்காணிப்பு பணியில் 75 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி:

குமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை அடுத்து மாவட்டம் முழுவ தும் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.

நாகர்கோவில் நகர பகுதியில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை மாநகராட்சி ஊழியர்கள் கிழித்து அகற்றினார்கள். மேலும் சுவர் விளம்பரங்கள் தார்பூசி அழிக்கப்பட்டது. 

கொல்லங்கோடு, பத்மநாபபுரம், குளச்சல், குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. பேரூராட்சி பகுதிகளிலும் விளம்பரங்களை அழிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். 

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடந்து வரும் நிலையில் வேட்பாளர்கள் வாக்காளர்களை சந்தித்து தங்களுக்கு ஆதரவு திரட்டும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். 

வாக்காளர்களுக்கு மது மற்றும் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் தேர்தலை கண்காணிக்க 75 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

பறக்கும் படையில் துணை தாசில்தார்கள், அதிகாரிகள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு பறக்கும் படையிலும் வீடியோகிராபர் நியமிக்கப்பட்டுள்ளார். பறக்கும் படை அதிகாரிகள் சோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பறக்கும் படையினர் 3 ஷிப்ட்களாக கண்காணிக்க உள்ளனர். தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்கும் வகையில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் உள்ளது. இதில் தேர்தல் விதிமுறைகள் மீறல் தொடர்பான புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
Tags:    

Similar News