உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

சளி, காய்ச்சலை தவிர்க்க சூடான தண்ணீர் குடிக்க வேண்டும் - டாக்டர்கள் அறிவுறுத்தல்

Published On 2022-01-27 07:38 GMT   |   Update On 2022-01-27 09:36 GMT
வழக்கமாக தினசரி 550 முதல் 700 பேர் புறநோயாளிகளாக வரும் நிலையில் தற்போது 850 முதல், 1,100 மருத்துவ ஆலோசனை பெற வருகின்றனர்.
திருப்பூர்;

திருப்பூர் மாவட்டத்தில் பகலில் வெயில் சுளீரென அடித்தாலும் அதிகாலை இரவு நேரங்களில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது. பலருக்கும் சளி, இருமல் தொந்தரவு ஏற்படுகிறது. சிலருக்கு காய்ச்சலும் வந்து விடுகிறது.

அரசு மருத்துவமனையை நாடி வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வழக்கமாக தினசரி 550 முதல் 700 பேர் புறநோயாளிகளாக வரும் நிலையில் தற்போது 850 முதல், 1,100 மருத்துவ ஆலோசனை பெற வருகின்றனர். இவர்களில் 60 சதவீதத்துக்கு அதிகமானோர் சளி, காய்ச்சல் தொந்தரவு உடையவராக உள்ளனர்.

அனைவரும் ஒரே வரிசையில் நிற்பதால் நேரம் அதிகமாகிறது. பிற பாதிப்பு ஏற்பட்டு வருவோரை அடையாளம் காண்பதில் நடைமுறை சிக்கல் ஏற்படுகிறது. 

இதனால் தலைமை அரசு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. புறநோயாளிகளிடம் என்ன பாதிப்பு என கேட்டு, அந்த பகுதிக்கு அனுப்பி வைக்க இரு செவிலியர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

புறநோயாளிகள் பிரிவில் காய்ச்சல் பகுதி, சளி மற்றும் பொது வார்டு, மற்றவை என தனித்தனியே பிரிவுகள், தனி அறையில் பிரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொருவருக்கும் தேவையான ஆலோசனைகளை டாக்டர்கள் வழங்குகின்றனர். தொடர் சிகிச்சை தேவைப்படுவோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர். மற்றவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில்:

குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால் முடிந்தவரை சூடான தண்ணீர், சூடான உணவுகளை அருந்தினால், சளி பிடிப்பது குறையும். சளி, காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் டாக்டர் பரிந்துரைக்கும் மருந்து, மாத்திரை முழுமையாக சாப்பிட வேண்டும்.

அப்போது தான் 3 நாட்கள் கடந்த பின்பும் உடல்நல குறைபாடு உள்ளதா? குணமாகி விட்டீர்களா? என்பது தெரியும். பெரும்பாலானோர் சரிவர பின்பற்றுவதில்லை. 

ஒரு நாள் மாத்திரையை சாப்பிட்டு விட்டு சற்று உடல் நலம் தேறிவிட்டால் நிறுத்திவிடுகின்றனர். சரிவர உணவு பழக்கம், மாத்திரை, மருந்து எடுத்துக் கொண்டால் விரைவில் குணமடைந்து விட முடியும். மீண்டும் சளி, காய்ச்சல் வருவதையும் தவிர்க்கலாம் என்றனர்.
Tags:    

Similar News