உள்ளூர் செய்திகள்
தற்கொலை

தண்டவாளத்தில் தலை வைத்து ஷேர் ஆட்டோ டிரைவர் தற்கொலை

Published On 2022-01-25 03:09 GMT   |   Update On 2022-01-25 03:09 GMT
விழுப்புரத்தில் தண்டவாளத்தில் தலை வைத்து ஷேர் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்துகொண்டார். கடன் சுமையால் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
விழுப்புரம்:

விழுப்புரம் மருதூர் மேல்அக்ரஹார தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகன் பிரகாஷ் (வயது 40), ஷேர் ஆட்டோ டிரைவர். இவர் தற்போது கொரோனா கால கட்டத்தில் போதிய வருமானமின்றி தவித்து வந்தார். இதனால் அவரது குடும்பம் வறுமையில் வாடியது.

இதனை சமாளிக்க பிரகாஷ், வெளியில் சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஷேர் ஆட்டோ தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். இதனால் அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார். ஒருகட்டத்தில் குடும்ப வறுமை, கடன் சுமை ஆகிய பிரச்சினை களால் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

இந்நிலையில் நேற்று பகல் 12 மணியளவில் விழுப்புரம் ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் தண்டவாளம் அருகே நடந்து சென்றார். அந்த சமயத்தில் அங்கிருந்து விழுப்புரம் ரெயில் நிலையத்திற்குள் செல்வதற்காக என்ஜின் ஒன்று வந்து கொண்டிருந்தது.

அப்போது ரெயில் என்ஜின் அருகில் சென்ற அவர் திடீரென ரெயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார். இதை சற்றும் எதிர்பாராத ரெயில் என்ஜின் டிரைவர், என்ஜினை சாதுர்யமாக இயக்கி நிறுத்த முயன்றார். ஆனால் அதற்குள் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பிரகாசின் உடல் மீது என்ஜின் ஏறி இறங்கியது. இதில் அவர் உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரகாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்துகொண்ட பிரகாசுக்கு லலிதா என்ற மனைவியும், யுவன்ராஜா (15), பிரவீன்ராஜா (12) என்ற 2 மகன்களும் உள்ளனர். குடும்ப வறுமை, கடன் சுமை காரணமாக ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து ஷேர் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News