உள்ளூர் செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட தந்தம்

யானை தந்தங்களை பதுக்கி விற்க முயன்ற 3 பேருக்கு கொரோனா

Published On 2022-01-24 08:32 GMT   |   Update On 2022-01-24 08:32 GMT
தேனி அருகே யானை தந்தங்களை விற்பனைக்கு வைத்திருந்து கைதான 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேவதானப்பட்டி:

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது30). இவரது நண்பர்களான அதே ஊரைச் சேர்ந்த பாலமுருகன் (35), பிரகாஷ் (29), பாக்கியராஜ் (30), முத்ததையா (37), வத்தலக்குண்டுவை சேர்ந்த அப்துல்லா (34), உசிலம்பட்டியை சேர்ந்த சிவக்குமார் (42), சின்னராஜ் (29), தேனியை சேர்ந்த சரத்குமார் (30), விஜயகுமார் (60) ஆகிய 10 பேரும் 920 கிராம் மற்றும் 970 கிராம் எடை கொண்ட 2 யானை தந்தங்களை ஒரு சாக்கு பையில் போட்டு அதனை விற்பனை செய்வதற்காக பலரிடம் விலை பேசி வந்துள்ளனர்.

ஆனால் யானை தந்தத்தின் உண்மையான மதிப்பு அவர்களுக்கு தெரியாததால் கொடைக் கானல் வனக்கோட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரியிடமே அவர் யார்? என்ற விவரம் தெரியாமல் உண்மையான விலை குறித்து கேட்டுள்ளனர்.

இதற்கு அவர் தேவதானப்பட்டி பைபாஸ் சாலைக்கு வருமாறும் அங்கு வைத்து பேசி முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

அதன்படி வேனில் 10 பேர் கொண்ட கும்பல் தேவதானப்பட்டி பைபாஸ் சாலையில் காத்திருந்தனர். அப்போது சுரேஷ் இங்கு வனத்துறை அலுவலகம் உள்ளதால் நாம் மாட்டிக்கொள்வோம் என கூறி வேறு இடத்திற்கு வருமாறு கூறி உள்ளார்.

ஆனால் அதற்குள் ரேஞ்சர் டேவிட்ராஜா மற்றும் பெரும்பள்ளத்தை சேர்ந்த வனத்துறையினர் 20&க்கும் மேற்பட்டோர் அவர்களை சுற்றி வளைத்தனர். தங்களை வனத்துறையினர் பிடிக்க வருவதை அறிந்த சுரேஷ் வன காப்பாளர் கருப்பையாவை தாக்கி விட்டு தப்பி ஓடினார். மற்ற 9 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த யானை தந்தங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

போடியில் பழமை வாய்ந்த அரண்மனை பராமரிப்பின்றி உள்ளது. தற்போது ஒருசிலர் அதனை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இங்குள்ள விலை மதிக்க முடியாத பொருட்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருகின்றன. தற்போது அரண்மனையில் இருந்த யானை தந்தங்கள் தான் கொள்ளையர்கள் வைத்திருந்தது என வனத்துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர். தப்பி ஓடிய சுரேசை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பிடிபட்ட 9 பேரையும் தேனி அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.இதில் சின்னராஜ், பிரகாஷ், அப்துல்லா ஆகிய 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர். அவர்களை கைது செய்யும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News