உள்ளூர் செய்திகள்
கைது

பூலுவப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் புகுந்து பிரதமர் மோடி படம் மாட்டிய பா.ஜனதா நிர்வாகி கைது

Published On 2022-01-24 06:37 GMT   |   Update On 2022-01-24 06:37 GMT
பா.ஜனதா அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் அலுவலகத்திற்குள் வந்தனர். அவர்கள் கையில் பிரதமர் மோடியின் புகைப்படமும் வைத்திருந்தனர்.

வடவள்ளி:

கோவை தொண்டாமுத்தூர் ஒன்றியத்தில் உள்ளது பூலுவப்பட்டி பேரூராட்சி. இந்த பேரூராட்சியில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். மக்களின் அடிப்படை தேவைகளுக்காக அங்கு பேரூராட்சி அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.

இந்த பேரூராட்சியின் செயல் அலுவலராக ரெங்கசாமி என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் செயல் அலுவலர் மற்றும் ஊழியர்கள் அலுவலகத்தில் பணியில் இருந்தனர்.

அப்போது பா.ஜனதா அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் அலுவலகத்திற்குள் வந்தனர். அவர்கள் கையில் பிரதமர் மோடியின் புகைப்படமும் வைத்திருந்தனர்.

வந்த வேகத்தில் பா.ஜனதாவினர் அங்குள்ள மேஜையை இழுத்து போட்டு அதன் மேல் ஏறி சுவரில் மோடியின் புகைப்படத்தை மாட்ட முயன்றனர். இதனை பார்த்த செயல் அலுவலர் ரெங்கசாமி மற்றும் ஊழியர்கள் அவர்களை தடுக்க முயன்றார்.

ஆனால் அவர்கள் எதனையும் கண்டு கொள்ளாமல் அலுவலக சுவரில் மோடியின் புகைப்படத்தை மாட்டினர்.

இதையடுத்து செயல் அலுவலர் ரெங்கசாமி மற்றும் ஊழியர்கள், பா.ஜனதாவினரிடம் பேரூராட்சி அலுவலகத்திற்குள் அனுமதியின்றி நுழையக்கூடாது.

கொரோனா பரவி வரும் சூழலில் நீங்கள் முக கவசமும் அணியவில்லை. மேலும் அனுமதியின்றி நுழைந்ததுடன், யாரை கேட்டு பிரதமரின் படத்தைமாட்டினீர்கள் என கேள்வி கேட்டனர். இதனால் பா.ஜனதாவினருக்கும், செயல் அலுவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதற்கு பா.ஜனதாவினர் இந்த அலுவலகத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி, முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் இருக்கும்போது, பிரதமர் மோடியின் படத்தை வைப்பதில் என்ன தவறு என கேள்வி எழுப்பினர். மேலும் பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் புகைப்படத்தை வைத்து கொள்ள அரசு உத்தரவு இருப்பதாகவும் பா.ஜ.கவினர் தெரிவித்தனர்.

பின்னர் படத்தை மாட்டி விட்டு வெளியில் வந்து சிறிது நேரம் கோ‌ஷங்களை எழுப்பி விட்டு அங்கிருந்து சென்றனர்.

இதனால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது. சம்பவம் குறித்து செயல் அலுவலர் ரெங்கசாமி ஆலாந்துறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பா.ஜனதா அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன், முருகேஷ் ஆகிய 2 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் இன்று காலை ஆலாந்துறை போலீசார் பாஸ்கரனை கைது செய்தனர்.

Tags:    

Similar News