உள்ளூர் செய்திகள்
அலங்கார ஊர்திகள் (கோப்பு படம்)

குடியரசு தின விழாவில் கலைநிகழ்ச்சிகள் ரத்து

Published On 2022-01-23 06:01 GMT   |   Update On 2022-01-23 06:01 GMT
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் மெரீனா கடற்கரையில் ஒரு மணி நேரம் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு 35 நிமிட நேரத்தில் விழாவை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை:

நாடு முழுவதும் குடியரசு தின விழா ஜனவரி 26-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்படு வது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுவதால் குடியரசு தின விழாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மெரினா கடற்கரை சாலையில் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் எதிரே குடியரசு தின விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 26-ந்தேதி காலை 8 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீரதீர செயல்புரிந்தவர்களுக்கு பதக்கங்களை அணிவிக்கிறார். இந்த நிகழ்ச்சிகளுக்காக மெரினா கடற்கரை சாலையில் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடை பெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகம் உள்ளதால் குடியரசு தின விழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.



குடியரசு தின விழாவில் அரசு துறைகளின் சாதனைகளை விளக்கும் வகையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்புகள் நடைபெறுவது வழக்கம். இதேபோல் மாணவ, மாணவிகளின் ஆடல்-பாடல், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாநில கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையில் கிராமிய கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேபோல் ஒவ்வொரு அரசு துறைகளின் அலங்கார ஊர்தி அணிவகுப்புகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழகத்தின் சார்பில் அனுப்பப்பட இருந்த வீரமங்கை வேலு நாச்சியார், வ.உ.சிதம்பரனார் உள்ளிட்டோரின் அலங்கார அணிவகுப்பு வண்டிக்கு அனுமதி கிடைக்காததால் அந்த அலங்கார வண்டிகள் சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி 26-ந்தேதி மெரீனா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் 4 அலங்கார வண்டிகள் அணிவகுத்து வர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதில் முதலாவது அலங்கார ஊர்தியாக செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி குழுவினரின் நாதஸ்வரம், தவில், வீணை குழுவினரின் மங்களஇசை இடம் பெறுகிறது.

இதில் மங்கள இசைக்கு ஏற்ப பரதநாட்டியம், வள்ளுவர் கோட்டம் தேர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பு நிகழ்ச்சி போட்டோக்கள் அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகள் பற்றிய புகைப்படங்கள் இடம் பெறுகின்றன.

2-வது அலங்கார ஊர்தியில் வீரமங்கை வேலு நாச்சியார், மருதுசகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகு முத்துக்கோன், பூலித்தேவன், ஒன்டிவீரண், வீரன் சுந்தரலிங்கம், குயிலி ஆகியோரது சிலைகளுடன் வேலூர் கோட்டை, காளை யார் கோவில் கோபுரம் ஆகியவை அலங்கார ஊர்தியில் இடம் பெறுகிறது.

இதேபோல் விடுதலைக்காக பாடுபட்ட வ.உ.சி. செக்கு இழுக்கும் நிகழ்வுகள், பாரதியார், சுப்பிரமணிய சிவா, ராகவாச்சாரி அவருடன் விடுதலைப் போரில் ஈடுபட்டவர்கள் ஆகியோரை காட்சிபடுத்தும் தத்ரூப சிலைகளுடன் சுதேசி கப்பலும் அலங்கார ஊர்திகளில் இடம் பெறுகின்றன.

தந்தை பெரியார், மூதறிஞர் ராஜாஜி, கர்ம வீரர் காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், ரெட்டமலை சீனிவாசன், வ.வே.சு. அய்யர், வாஞ்சி நாதன், தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன், கன்னிய மிகு காயிதே மில்லத், ஜோசப் குமாரப்பா ஆகிய தலைவர்களை சித்தரிக்கும் தத்ரூப சிலைகளுடன் அலங்கார ஊர்தி இடம் பெறுகிறது.

இதுதவிர மத்திய அரசின் சார்பில் தரைப்படை, கப்பற்படை, விமானப்படையின் சாதனைகளை வெளிப்படுத்தும் அலங்கார ஊர்திகளும் அணிவகுத்து வருகின்றன.

போலீசாரின் அணி வகுப்பு நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் மெரீனா கடற்கரையில் ஒரு மணி நேரம் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு 35 நிமிட நேரத்தில் விழாவை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் விழாவை காண்பதற்கு ஏராளமான மாணவ, மாணவிகளும் பொதுமக்களும் மெரீனா கடற்கரையில் திரண்டு நிற்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

குடியரசு தின விழா நடைபெறும் மெரீனா கடற்கரையில் கடந்த 2 நாட்களாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் அந்த பகுதிகளில் தீவிர சோதனையும் மேற்கொண்டு வருகின்றனர்.

குடியரசு தின விழா நடைபெறும் 26-ந்தேதி கடலோர காவல் படை வீரர்களும் மெரினா கடற்கரையில் ரோந்து சுற்றி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்... நேதாஜியின் பங்களிப்பிற்கு தலை வணங்குகிறேன் - பிரதமர் மோடி

Tags:    

Similar News