உள்ளூர் செய்திகள்
கோவையைச் சேர்ந்த பக்தர்கள் இன்று பழனிக்கு முருகனின் தேரை இழுத்தபடி பாதயாத்திரையாக வந்தனர்.

ஊரடங்கு நாளிலும் பழனிக்கு பாதயாத்திரையாக வந்த வெளியூர் பக்தர்கள்

Published On 2022-01-23 05:55 GMT   |   Update On 2022-01-23 05:55 GMT
பழனி முருகன் கோவிலுக்கு ஊரடங்கு நாளான இன்று அதிக அளவு பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர்.
பழனி:

பழனி கோவிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற தைப்பூச திருவிழாவில் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த வருடம் திருவிழாக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

கொடியேற்றம், திருக்கல் யாணம், தேரோட்டம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் பக்தர்கள் இல்லாமலேயே நடை பெற்றது. இருந்தபோதும் மறு நாட்களில் பக்தர்கள் சுவாமியை வழிபட்டு சென்றனர்.

இதனால் தைப்பூசத் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க முடியாவிட்டாலும் பழனி முருகனை தரிசித்தால் போதும் என்று பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் பல்வேறு ஊர்களில் இருந்து பழனி நோக்கி பக்தர்கள் காவடி மற்றும் அலகு குத்தியும், சுவாமி தேர் இழுத்தும் வந்தனர். இவர்கள் மண்டபங்களில் தங்கி நாளை நடை திறக்கப்பட்டதும் பழனி முருகனை தரிசிக்க உள்ளனர்.

வழக்கமாக தைப்பூசத் திருவிழா முடிவடைந்தபிறகு பழனி கோவிலுக்கு குறிப்பிட்ட சில ஊர்களில் இருந்து பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள். அதன்படி சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் பழனி கோவிலுக்கு வந்து மலைக்கோவிலில் தங்கி பஞ்சாமிர்தம் தயாரித்து அதனை முருகனுக்கு படையலிடுவார்கள்.

பின்னர் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி சுவாமியை வழிபட்டு சொந்த ஊருக்கு திரும்புவார்கள். இதே போல பல்வேறு ஊர்களில் இருந்து பழனிக்கு பக்தர்கள் வருகை அதிகமாக காணப்படும்.

கோவையைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் முருகனின் தேரை ஊர்வலமாக இழுத்து வந்து பழனி கோவிலில் இன்று வழிபாடு நடத்தினர். இதே போல கேரளாவைச் சேர்ந்த பக்தர்களும் அதிக அளவில் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

வழக்கம் போல் 3 நாட்களுக்கு பிறகு நாளை நடை திறக்கப்பட்டதும் இவர்கள் அனைவரும் மீண்டும் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Tags:    

Similar News