உள்ளூர் செய்திகள்
ஐகோர்ட்டு

மாணவியின் உடலை மறு கூராய்வு செய்ய தேவை இல்லை

Published On 2022-01-22 11:32 GMT   |   Update On 2022-01-22 11:32 GMT
தற்கொலை செய்த மாணவியின் உடலை மறு கூராய்வு செய்ய தேவையில்லை என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்தது.
மதுரை

தஞ்சையை அடுத்துள்ள மைக்கேல்பட்டி தனியார் கிறிஸ்தவ பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த பிளஸ்-2 மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மாணவியை மதம் மாறச்சொல்லி கட்டாயப்படுத்தியதால்தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகக்கூறி, அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என கூறி மாணவியின் தந்தை முருகானந்தம் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதி கூறுகையில், காவல் துறையினர் மீது சிறுமியின் பெற்றோரை மிரட்டுவதாக புகார் முன் வைக்கப்படுகிறது.  எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் திருக்காட்டுப்பள்ளி காவல் துறையினர் வழக்கை விசாரிக்க வேண்டும் என்றார். 

இந்த நிலையில் மீண்டும் மனுதாரர் தரப்பில் முறையீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவசர வழக்காக எடுத்து விசாரித்தார். அப்போது அவர்  மாணவியின் உடலை பெற்றுக்கொள்ளுமாறு அவரது பெற்றொரிடம் கோரிக்கை விடுக்கிறேன். மாணவியின் தந்தை முருகானந்தம், தஞ்சை நீதித்துறை நடுவரிடம் நேரில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கலாம். 

மாணவி இறப்பிற்கு முன்பு, பதிவு செய்யப்பட்ட வீடியோ சமூக வலை தளங்களில் பரவியுள்ளது. அதில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுமாறு கட்டாயப்படுத்தியதாக சிறுமி கூறியுள்ளார் என தெரிய வருகிறது. அந்த வீடியோவை எடுத்த நபரைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்போவதாக தஞ்சை காவல் கண்காணிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மாணவியின் உடல் ஏற்கனவே தஞ்சை மருத்துவக்கல்லூரி தடய அறிவியல் மருத்துவர்களால் உடற்கூராய்வு செய்யப்பட்டுள்ளது. மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக சந்தேகம் எதையும் முன்வைக்கவில்லை. 

ஆகவே, மறு உடற் கூராய்வு செய்ய தேவையில்லை. எனவே மாணவியின் உடலை, பெற்றோர் பெற்றுக்கொண்டு அடக்கம் செய்ய வேண்டும். நாளை மாணவியின் தந்தையும், தாயும் தஞ்சை நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜராகி, தனது மகள் தன்னிடம் தெரிவித்தவை குறித்தும், மாணவியின் இறப்பு குறித்தும் வாக்குமூலம் அளிக்கவும், அதனை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும். 

மாணவியின் உடலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல தேவையான நடவடிக்கை களை செய்து தர வேண்டும். அவற்றில் காவல்துறையினர் தலையிடக்கூடாது என உத்தரவிட்டு வழக்கை திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு பட்டியலிட ஒத்தி வைத்தார்.
Tags:    

Similar News